தனது அதிருப்தியை வெளிப்படுத்திய காரணத்தால் அதிமுகவின் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செல்போனில் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு தற்போது சோதனை காலமா என தெரியவில்லை. கட்சியில் பல குளறுபடிகள் நடந்த வண்ணம் உள்ளன. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அந்த வரிசையில் தற்போது செங்கோட்டையனும் இணைக்கப்பட்டுள்ளார். வெள்ளிக் கிழமை அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
24
கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்
கட்சியில் பல முன்னணி தலைவர்கள் நீக்கப்பட்ட நிலையில் நாம் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறோம். வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற முக்கிய தலைவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வேண்டும். இன்னும் 10 தினங்களில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளாவிட்டால் நாங்கள் அந்த பணியை செய்வோம் என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பொதுச்செயலாளருக்கு கெடு விதித்த செங்கோட்டையனை கட்சியின் அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
34
ஒன்றிணையச் சொன்னதற்கு தண்டனையா?
மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம், “அதிமுக கழகம் ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்த கருத்திற்கு இவ்வளவு பெரிய கொடுஞ்செயலை, தண்டனையாக தர வேண்டுமா என தமிழக மக்கள் அனைவரும் கேட்கின்றனர். அதிமுக பிரிந்ததில் இருந்து 11 தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. இது தேவைதானா என அதிமுக தொண்டர்களின் கேள்வியாக உள்ளது.
செங்கோட்டையனின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு அவரை அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்ச நிலை இதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். கடந்த காலங்களில் அதிமுக விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது தான் மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார், அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனக் கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததில்லை.
அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா. ஆனால் இன்று தலைவர்கள் பிரிந்து இருப்பதால் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிமுக தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்களின் மனக்குமுறலாக உள்ளது, அதை தேர்தல் சமயத்தில் வெளிப்படுத்துவார்கள். 10 நாட்களுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நான் சந்திப்பேன், செங்கோட்டையனின் ஒருங்கிணைப்பு முயற்சி வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.