Published : Jul 26, 2025, 09:16 AM ISTUpdated : Jul 26, 2025, 09:55 AM IST
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மின் கட்டண உயர்வு, டாஸ்மாக் ஊழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து திமுக அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில் மக்களை சந்திக்க ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு களத்தில் இறங்கவுள்ளது. இந்த நிலையில் அதிமுக சார்பாக மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தேர்தல் பிரசார பயணம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளுக்கு நேரில் செல்லும் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தினமும் மக்கள் மத்தியில் பேசி வருகிறார். அதன் ஒரு கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் சென்றவர் திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பேசினார்.
24
அதிமுக ஆட்சி கால திட்டங்கள்
200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என திமுக கனவு காண்கிறது. அது பகல் கனவாகவே முடிந்து விடும். அதற்கு எடுத்துக்காட்டு தான் புதுக்கோட்டையில் மக்களின் எழுச்சி. கஜா புயலின் போது இந்த மாவட்டமே பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. கஜா புயல் எந்த வேகத்தில் வந்ததோ அதே வேகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் தான் தென்னை மரத்துக்கு நஷ்ட ஈடு, மறு சாகுபடிக்கு நிதி உதவிஎன இது போன்ற பல விவசாயிகளுக்காக திட்டங்களையும் அதிமுக அரசு செயல்படுத்தியது. மேலும் கொரோனா பாதிப்பின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரேஷன் கடையில் விலை இல்லாமல் உணவு பொருட்களைக் கொடுத்தோம். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவித்தோம். 10 ஆண்டுகளில் 21 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
34
4ஆயிரம் மின் கட்டணம் இப்போ 12ஆயிரம்
ஆனால் திமுக அரசு கடை வரி, வீட்டு வரி, குடிநீர் வரி என எல்லாத்தையும் உயர்த்தி விட்டது. போதாக்குறைக்கு தற்போது குப்பைக்கும் வரி வசூலிக்கிறார்கள். அடுத்ததாக மக்களுக்கு பாதிக்கப்படக்கூடிய வகையில் மின் கட்டணத்தில் இஷ்டத்திற்கு பில் போடுகிறார்கள். மின் கட்டணம் எப்படி கணக்கீடு செய்கிறார்கள் என்று எனக்கே இன்னமும் புரியவில்லை. இஷ்டத்துக்கு மின் கட்டணத்திற்கு பில் போடுகிறார்கள்.
எப்படி கணக்கு வைக்கிறார்கள், என்ன கணக்கு வைத்து கணக்கிடுகின்றனர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. எப்போதும் என் வீட்டிற்கு 4500 முதல் 5000 ரூபாய் தான் மின் கட்டணம் வரும். ஆனால் தற்போது 12500 ரூபாய் வந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் ஏதோ ஏதோ பதில் சொல்கிறார்கள். எனவே மக்களை குழப்பி பணத்தை சுரண்டுகிற ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. இந்த ஆட்சி தேவையா.?
திமுக ஆட்சி வந்த பின்னர், 52 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இப்போது 67 சதவீதமாக மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர் என தெரிவித்தார். இது மட்டும் இல்லாமல் தமிழக முழுவதும் 6000 மதுக்கடைகள் இருக்கின்றன இந்த மதுக்கடையில் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது.
இதன் மூலம் மட்டும் ஒரு வருடத்திற்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய் டாஸ்மாக்கில் இருந்து ஊழல் நடைபெறுகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 46 பிரச்சனைகளுக்கு 45 நாட்கள் தீர்வு காணலாம் என கூறுகிறார்கள். 46 பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்தும் ஏன் நான்கு ஆண்டுகள் இந்த அரசு தூங்கியது இப்பதான் மக்களைப் பற்றி முதல் சிந்திக்க தொடங்கியுள்ளாரா முதலமைச்சர் ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.