பாமக.வின் தலைவர் அன்புமணியின் உரிமை மீட்பு பயணம் திட்டமிட்டபடி தொடரும், காவல் துறையினர் பயணத்திற்கு தடை விதிக்கவில்லை என்று பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் 100 நாட்கள் நடைபயணத்தை நேற்றுத் தொடங்கினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த பயணம் வருகின்ற நவம்பர் 1ம் தேதி நிறைவடைவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
24
தந்தை, மகன் இடையே மோதல்
ஏற்கனவே பாமக.வில் தந்தை, மகன் இடையே மோதல் நிலவும் நிலையில் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கட்சியின் நிறுவனரான எனது அனுமதி இல்லாமல் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அன்புமணியின் நடைபயணத்தால் வடதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும் அன்புமணி பொதுமக்களை சந்திப்பதற்கும், கட்சியின் கொடி, கட்சியின் பெயரை பயன்படுத்துவதற்கும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
34
டிஜிபியின் சுற்றறிக்கையால் பரபரப்பு
இதன் தொடர்ச்சியாக டிஜிபி அலுவலகத்தில் இருந்து அன்புமணியின் நடைபயணம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கையில் அன்புமணியின் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாமகவின் அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு சுற்றறிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தார். அதன்படி டிஜிபி.யின் சுற்றறிக்கை தொடர்பான தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டள்ளது. நிறுவனர் ராமதாஸ் வழங்கிய மனுவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு டிஜிபி ஃபார்வேர்ட் மட்டுமே செய்துள்ளார். மாறாக பயணத்திற்கு தடை விதிக்கவில்லை. தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் ரத்து செய்யலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அன்புமணியின் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி தொடரும் என்று விளக்கம் அளித்துள்ளார்.