''தென்மாவட்டங்களில் கனிமக்கொள்ளையை தடுக்க முடியாததால் மானமுள்ள திமுக நிர்வாகி விலகியுள்ளார். இனியாவது முதல்வர் விழிப்பாரா, சீரழிப்பாரா? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். ''தென் மாவட்டங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கனிமக் கொள்ளை நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கேரளத்திற்கு கடத்திச் செல்லப்படுகின்றன; கனிமக் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு காட்பாதராக இருந்து திமுகவின் பெரும்புள்ளி ஒருவர் பாதுகாக்கிறார் என்று பல ஆண்டுகளாக நான் குற்றஞ்சாட்டி வருகிறேன். அவை அனைத்தும் உண்மை என்று இப்போது திமுக நிர்வாகியின் வாக்குமூலத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இனியாவது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதை சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக போராட வேண்டிய திமுக நிர்வாகியாலேயே தடுக்க முடியவில்லை; கனிமக் கொள்ளை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திமுக நிர்வாகியே புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல செய்திகளை இந்த ஒற்றை பதவி விலகல் கடிதம் கூறுகிறது.
இனியாவது கனிமக் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது முதல்வர் ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை வாக்கு என்னும் ஆயுதத்தைக் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிப்பார்கள்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.