அன்புமணி தலைமையில் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய பாமக நிறுவனர் ராமதாஸ்ன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில காலமாக தந்தை, மகன் இடையேயான அதிகார மோதல் அதிகரித்துள்ளது. இதனிடையே கட்சியில் செல்வாக்கை நிலைநாட்ட நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி என இருவர் தலைமையிலும் வெவ்வேறு தேதிகளில் பொதுக்குழு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
24
மாமல்லபுரத்தில் பொதுக்குழு
அந்த வகையில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் சனிக்கிழமை மாமல்லபுரத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பொதுக்குழு நிறுவனரான எனது அனுமதி இல்லாமல் கூட்டப்படுகிறது, எனவே இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
34
சமரசம் செய்ய முயன்ற நீதிபதி
மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அன்புமணி, ராமதாஸ் என இருவரிடமும் நான் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும். இந்த சந்திப்பின் போது அவர்களது ஆதரவாளர்களோ, வழக்கறிஞர்களோ கூட இடம் பெறக் கூடாது என நிபந்தனை விடுத்தார். அதன் அடிப்படையில் அன்புமணி நீதிபதி முன்பு நேரில் ஆஜரானார். உடல்நிலையைக் காரணம் காட்டி ராமதாஸ் காணொலி வாயிலாக நீதிபதி முன்பு ஆஜரானார். இரு தரப்பினரிடமும் நீதிபதி தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்புமணி தரப்பில் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் உத்தரவிட்டார். இதனால் கட்சியின் நிறுவனரான ராமதாஸ்க்கு கட்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.