2 நாட்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்துள்ளார். திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து சாலை மார்க்கமாக மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர். பின்னர் மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மதிய உணவு அருந்திவிட்டு அங்கிருந்து 2 மணிக்கு சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் வருகை தந்து தனி விமானம் மூலமாக கோயம்புத்தூர் புறப்பட்டு சென்றார்.
கோவை வந்த குடியரசு தலைவரை ஈஷா யோகா மையத்தின் சத்குரு மாலை அணிவித்து வரவேற்றார். இதையடுத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேட்டரி காரில் ஈஷா யோகா மையத்தை சுற்றி பார்த்தார். இந்த வேளையில் பேட்டரி காரை சத்குரு ஓட்டி சென்றதோடு, யோகா மையம் மற்றும் அங்குள்ள லிங்கங்கள் பற்றிய விபரங்களை எடுத்து கூறினார்.
அஉம் நமசிவாய என்ற மந்திரத்துடன் தன் உரையை தொடங்கினார் குடியரசு தலைவர். அப்போது பேசிய அவர், அஉம் நமசிவாய! சிவனாக இருக்கும் அனைத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். ஆதியோகி முன்னிலையில் நடைபெறும் இந்த புனித மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதை ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன்.
உலகிலுள்ள பல்வேறு கலாச்சாரங்கள், பக்தி மற்றும் ஞானத்தின் பாதை குறித்து பேசுகின்றன. அவையனைத்திற்குமான மூர்த்தியாக சிவன் விளங்குகிறார். அவர் குடும்ப வாழ்க்கையிலும் இருக்கிறார் அதே வேளையில் சந்நியாசியாகவும் இருக்கிறார். அவர் தான் இந்த உலகின் முதல் யோகி மற்றும் முதல் ஞானி. சிவன் கருணை கடவுளாகவும், ஆக்ரோஷமான வடிவமாகவும் இருக்கிறார்.
முக்திக்கான பாதையின் வழிகாட்டியாகவும் சிவன் விளங்குகிறார். ஆக்கும் மற்றும் அழிக்கும் சக்திகளில் ஒன்றிணைந்த குறியீடாகவும் இருக்கிறார். அறியாமை எனும் இருளின் முடிவாகவும், ஞான பாதையின் திறப்பாகவும் மஹாசிவராத்திரி விளங்குகிறது. வாழ்வின் உயரிய தேடல்களை கொண்டவர்களுக்கு இந்நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நவீன காலத்தின் போற்ற தக்க ரிஷியாக விளங்கும் சத்குரு, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நம்முடைய ஆன்மீக அம்சங்களை எண்ணிலடங்கா மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார். குறிப்பாக ஏராளமான இளைஞர்களை ஆன்மீக பாதையில் ஈர்க்கும் யோகியாகவும் இருக்கிறார்.