
நாம் சுவைக்காக சேர்க்கப்படும் வெள்ளை சர்க்கரை உடலில் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். 90 நாட்களுக்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் பல்வேறு நேர்மையான மாற்றங்கள் ஏற்படும். ஆரம்பத்தில் சில அசௌகரியங்கள் ஏற்பட்டாலும், பின்னர் நீண்ட காலத்திற்கு நன்மைகளைப் பெறலாம். சர்க்கரையை நிறுத்தியவுடன் தலைவலி, எரிச்சல், சோர்வு, இனிப்பு மீதான தீராத ஆசை, மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றை அனுபவிக்கலாம். சர்க்கரை சேர்க்கமால் இருப்பதால் ஆரம்பத்தில் சோர்வாக உணரலாம். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு இந்த நிலைமைகள் சீராகும்.
சர்க்கரையை நம் உணவில் இருந்து நீக்கிய பின்னர் நம் உடல் எடை வெகுவாக குறையும். சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களில் கலோரிகள் அதிகம் இருப்பதால் அதை எடுத்துக் கொள்ளும் பொழுது உடல் எடை அதிகரிக்கும். சர்க்கரையை உடனடியாக நிறுத்தும் பொழுது உடல் எடை வெகுவாக குறையத் தொடங்கும். குறிப்பாக வயிற்றுப் பகுதிகளில் உள்ள கொழுப்புகள் குறையலாம். சர்க்கரையை உட்கொள்ளாமல் இருப்பதால் நம் உடலில் சர்க்கரையின் அளவு மிகவும் நிலையானதாக இருக்கும். ஏற்ற இறக்கங்கள் ஏற்படாது. டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயமும் குறையும். உடல் இன்சுலினுக்கு சிறந்த பதிலளிக்கும். இன்சுலின் எதிர்ப்பையும் குறைக்கும்.
அதிகமான சர்க்கரை எடுத்துக் கொள்வது இதய நோய் அபாயத்துடன் தொடர்புடையது. சர்க்கரை நுகர்வை குறைப்பதன் மூலம் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவுகள் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். இது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. சர்க்கரை சேர்க்கப்படாத உணவுகள் குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களுக்கு நன்மை அளிக்கும். சர்க்கரை உட்கொள்ளாமல் இருந்தால் முகப்பரு, சரும சுருக்கங்கள் ஆகியவை ஏற்படாது. சர்க்கரையை குறைப்பதன் மூலம் சருமம், முகம், ஆகியவை தெளிவானதாகவும் இளமையானதாகவும் இருக்கும். இளமையான தோற்றத்துடன் விளங்க முடியும்.
ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு நிலையானதாக மாறுவதால் பலருக்கும் மேம்பட்ட அறிவாற்றல், செயல்பாடு, கவனம் மற்றும் மனத் தெளிவு ஏற்படும். அடிக்கடி ஏற்படும் மனநிலை மாற்றங்கள், மன அழுத்தம், பதட்டம் ஆகியவை குறையலாம். அதிக சர்க்கரை நுகர்வு பற்களின் சிதைவு மற்றும் பல் சொத்தைகளுக்கு முக்கிய காரணமாகும். வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் வெள்ளை சர்க்கரை எடுப்பதை அறவே நிறுத்த வேண்டும். சர்க்கரையை நிறுத்திய பின்னர் இனிப்பு உணவுகளுக்கான ஆசை கணிசமாக குறையும். சிறிது இனிப்பை சாப்பிட்டாலே திகட்டுவது போல் இருக்கும். இது பழங்கள் போன்ற இயற்கை இனிப்புகளை சாப்பிட உங்களைத் தூண்டும்.
சர்க்கரையிலிருந்து வரும் திடீர் ஆற்றல் ஏற்ற இறக்கங்களுக்குப் பதிலாக உங்கள் உடல் கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து நிலையான ஆற்றலை பயன்படுத்த பயன்படுத்தத் தொடங்கும். ரத்த சர்க்கரை அளவுகள் சீராக இருப்பதால் சிறந்த தூக்கம் கிடைக்கும். அதிக சர்க்கரை உட்கொள்ளல் உடல் வீக்கத்தை ஏற்படுத்தும். சர்க்கரையை குறைப்பது வீக்கத்தை குறைத்து ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். 90 நாட்கள் நீங்கள் தொடர்ந்து சர்க்கரையை தவிர்த்தால் டைப் 2 நீரிழிவு, இதய நோய், கொழுப்பு கல்லீரல் போன்ற ஆபத்துகள் வெகுவாக குறையலாம். சர்க்கரையை கைவிடுவது எளிதானது அல்ல என்றாலும், உங்கள் உடல் மற்றும் மனதிற்கு நீண்டகால நன்மைகளை வழங்கும்.