
கொய்யா இலைகள் பெரும்பாலும் பலராலும் கவனிக்கப்படுவது இல்லை. ஆனால் இதில் செல்களை பாதுகாக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ், வீக்கத்தை குறைக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும், பாக்டீரியாக்களை அழிக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும்,, பூஞ்சை, கிருமிகளை அழிக்கும் கிருமி நாசினியாகவும், வலியைக் குறைக்கும் வலி நிவாரணியாகவும், சுவாசப்பாதையில் இருக்கும் சளியை வெளியேற்றும் கபம் அகற்றியாகவும் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
கொய்யா இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனைக் கொடுக்கின்றன. இந்த இலைகள் சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் போன்ற சர்க்கரைகளை உடல் உறிஞ்சுவதை தடுக்கின்றன. கொய்ய இலைகளை தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து கஷாயம் போலவோ அல்லது தேநீர் போலவோ குடித்து வந்தால் உணவுக்கு பின் ஏற்படும் ரத்த சர்க்கரை அதிகரிப்பை கணிசமாக குறைக்கும். மேலும் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பை தூண்டி, சர்க்கரையை சம நிலையில் வைத்திருக்க உதவும். நீரிழிவு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ப்ரீ டயாபடீஸ் உள்ளவர்களுக்கும் இது நன்மையைக் கொடுக்கும்.
கொய்யா பழத்தில் இருப்பது போலவே கொய்யா இலைகளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை தடுக்கிறது. இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் குடலில் வளரும் கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும். இதனால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும். கொய்யா இலை தேநீர் அருந்துவது அஜீரணம் மற்றும் வயிற்றுப் புண்களுக்கு நிவாரணம் தரும். இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் குடல் இயக்கங்கள் மேம்பட்டு மலச்சிக்கலைத் தடுக்கும். கொய்யா இலைகள் கார்போஹைட்ரேட்டுகளை சர்க்கரையாக மாற்றும் நொதிகளின் செயல்பாட்டை தடுக்கின்றன. இதன் காரணமாக உடலில் கொழுப்பு சேர்வது கட்டுப்படுத்தப்படுகிறது.
கொய்யா இலை தேநீர் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதால் எடை இழப்புக்கும் காரணமாகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கொய்யா இலைகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இது கெட்ட கொழுப்பான எல்டிஎல் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. இதனால் இதய நோய் அபாயமும் குறைகிறது. சுவாசப் பாதைகளில் உள்ள சளியை அகற்றும் தன்மையும், நுரையீரலில் தேங்கியுள்ள சளியை தளர்த்தும் தன்மையும் கொய்யா இலைகளுக்கு உண்டு. அலர்ஜி, ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு உள்ளவர்களும் கொய்யா இலை தேநீரை குடித்து வரலாம். இந்த இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது மூக்கடைப்பை சரி செய்யும்.
கொய்யா இலைகளில் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இது பல் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யும். வாய் துர்நாற்றத்தை போக்கும். பாக்டீரியாக்களை அழிக்கும். ஈறுகளில் ஏற்படும் நோய் தொற்றுக்களை எதிர்த்து போராடும். இலைகளை மென்று சாப்பிடுவது, பல் வலி, ஈறு வீக்கம், வாய் துர்நாற்றம் ஆகியவற்றை குறைக்க உதவும். கொய்யா இலை கஷாயத்தை வாய் கொப்பளிக்கவும் பயன்படுத்தலாம். கொய்யா இலைகள் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்தவை. இந்த இலைகளை அரைத்து முகப்பருக்கள் மீது பூசினால் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, அலர்ஜியை குறைத்து முகப்பருக்களை குணப்படுத்த உதவும். மேலும் சருமத்தை சுத்தப்படுத்தி பளபளப்பாக வைத்திருக்கவும், கரும்புள்ளிகள் சுருக்கங்களை குறைக்கவும் உதவுகிறது.
ஐந்து முதல் பத்து கொய்யா இலைகளை நீரில் போட்டு நீர் பாதியாகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சுவைக்கு தேன் சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் தேன், வெள்ளை சர்க்கரை, நாட்டு சர்க்கரை போன்றவற்றை அறவே தவிர்த்து விட்டு, எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். தேநீராக குடிக்க விரும்பாதவர்கள் இலைகளை நேரடியாக மென்றும் சாப்பிட்டு வரலாம். மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் அடிப்படை தகவல்களை மட்டுமே வைத்து எழுதப்பட்டவை. இதற்கு ஏசியாநெட் இணையதளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. கொய்யா இலைகளை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், சிலருக்கு ஒவ்வாமை அல்லது எதிர் வினைகளை ஏற்படுத்தலாம். எனவே மருத்துவ ஆலோசனைக்கு பின்னர் எடுத்துக் கொள்வது நல்லது.