
முந்தைய காலங்களில் பலரும் சிறுதானியங்களை பிரதான உணவாக உண்டனர். ஆனால் தற்போதைய காலத்தில் அவற்றை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சிறு தானியங்களை விளைவிப்பதற்கு விவசாயிகளே இல்லை என்ற சூழலும் உருவாகிவிட்டது. இதன் காரணமாக சிறுதானியங்கள் சாப்பிடுவது அரிதானதாக மாறிவிட்டது. ஆனால் தற்போது மீண்டும் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்தும், அதன் ஊட்டச்சத்துக்கள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இவை செரிமானத்திற்கு எளிதானவை மட்டுமல்ல, உடல்நலப் பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டவை. குழந்தைகளின் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய சிறுதானியங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அதிக கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதங்கள், அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள சிறுதானியமாக கேழ்வரகு விளங்குகிறது. இதில் இருக்கும் கல்சியம் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானம் மேம்படுத்துகிறது. ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ராகி மாவை கஞ்சி, தோசை, இட்லி, அடை, சப்பாத்தி போன்ற வடிவங்களில் கொடுக்கலாம். ஐந்து வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு சத்து மாவு போல செய்து நாட்டு சர்க்கரை சேர்த்து சிறிது கெட்டியாக கொடுக்கலாம்.
கம்பில் இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, நார்ச்சத்து, புரதம் ஆகியவை நிறைந்துள்ளது. இது அதிக ஆற்றலை வழங்குவதால் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பை கொடுக்கிறது. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. இதில் இருக்கும் துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கம்பு மாவை கஞ்சி, கூழ், ரொட்டி, தோசை ஆகிய வடிவங்களில் கொடுக்கலாம். கோடை காலங்களில் காலை உணவாக கூட கம்பு உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். பெரியவர்கள. கம்பை கூழ் செய்து குடிக்கும் பொழுது அதில் தயிர், சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து அருந்தலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது நாட்டு சர்க்கரை சேர்த்து களி போல செய்து கொடுக்கலாம்.
சாமையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், புரதம் ஆகியவை இருக்கிறது. இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் குடல் இயக்கம் மேம்பட்டு செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மெதுவாக ஆற்றலை வெளியிடுவதால் குழந்தைகளின் ஆற்றல் சீராக இருக்கும். சாமையை சாதம் போல சமைத்து சாப்பிடலாம். சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவையாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அல்லது பொங்கல், உப்புமா, கிச்சடி போன்றவையும் செய்து கொடுக்கலாம். வெல்லம் சேர்த்து சர்க்கரை பொங்கல் போலவும் செய்து சாப்பிடலாம்.
திணையில் வைட்டமின் பி1, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம் ஆகியவை நிறைந்துள்ளது. இதில் இருக்கும் வைட்டமின் பி1 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நரம்புகளை வலுவாக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானம் மேம்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. திணையை சாதம் போல செய்து காய்கறிகள் அல்லது பருப்புடன் கொடுக்கலாம். வெள்ளை அரிசியை பயன்படுத்துவதை விடுத்து திணையில் பாயாசம், இனிப்பு பொங்கல் போன்றவற்றையும் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
நார்ச்சத்து, புரதம், கால்சியம், இரும்புச்சத்து ஆகிய நன்மைகளைக் கொண்டுள்ள மற்ற இரு தானியங்கள் வரகு மற்றும் குதிரைவாலி ஆகும். இந்த இரண்டிலும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் எளிதில் செரிமானம் ஆகிறது. உடலுக்கு சீரான ஆற்றலை வழங்குகிறது. வரகில் இருக்கும் சில ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. குதிரைவாலியில் இருக்கும் கால்சியம் சத்து எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. வரகை சாதம் போல வடித்து தயிர் சாதம் அல்லது சாம்பார் சாதம் போல செய்து சாப்பிடலாம். உப்புமா, கிச்சடி, தோசை போன்ற வடிவங்களில் சாப்பிடலாம். குதிரைவாலியை பொங்கல், உப்புமா போன்ற வடிவங்களிலும் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு சிறுதானியங்களை அறிமுகப்படுத்தும் பொழுது மிகக் குறைந்த அளவில் தொடங்கி படிப்படியாக அதிகரிக்க வேண்டும். நன்கு சமைத்து குழைத்து மென்மையாக்கி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ஒரே தானியத்தை கொடுக்காமல் சுழற்சி முறையில் கொடுத்தால் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும். குழந்தைகள் சாப்பிடும் வகையில் சுவை மற்றும் அமைப்பை மாற்றி செய்து கொடுக்கலாம். பழங்கள், காய்கறிகள், பருப்புகள் சேர்த்து செய்யும் பொழுது சிறுதானியங்களின் சுவை அதிகரிக்கும். இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் போதுமான அளவு தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும்.
குறிப்பு: சில வகையான சிறுதானியங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகள் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். எனவே மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே சிறுதானியங்களை குழந்தைகளுக்கு கொடுக்கத் தொடங்க வேண்டும். குழந்தைகளாக இருந்தால் கஞ்சியாகவும், பெரிய குழந்தைகளுக்கு தோசை, இட்லி போன்ற வடிவங்களிலும் கொடுக்கலாம். குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும் மருத்துவரின் ஆலோசனை இன்றி எடுத்தல் கூடாது.