Asianet News Tamil

மகத்துவமிக்க சிறுதானியங்கள்…

high millets
Author
First Published Dec 3, 2016, 2:19 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


நெல், கோதுமை போன்ற பெருதானியங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளையும், அதற்கு உபயோகப்படுத்தும் இரசாயனங்களும் அதிகமாக இருக்கிறது.

இந்த ரசாயன பொருட்களால் மண்ணுக்கும், மக்களுக்கும் உண்டாகும் கேடுகள் அதிகம். இதற்கு மாற்று சிறுதானியங்களே என விவரிக்கிறார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சிறுதானியத்துறை பேராசிரியை நிர்மலாகுமாரி.

சிறுதானியங்கள் என்பது ஏதோ வழக்கொழிந்த தானியங்கள் அல்ல. நம் பழக்க வழக்கங்கங்களுக்கு ஏற்ற தானியங்கள். ஏதோ நம் தென் தமிழ் நாட்டிற்கோ, தாய்த்திரு நாட்டிற்கோ மட்டும் உரியது என்று நினைக்க வேண்டாம்.

கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, பனிவரகு, சோளம், கம்பு ஆகிய இச்சிறுதானியங்கள் மங்கோலியா, சீனா, இரஷ்யா, தெற்காசியா என்று உலகின் எல்லாப்பகுதிகளிலும், ‘புல்லரி’சியாக வேட்டை சமூகத்திற்கும், மேய்ச்சல் நில நாடோடிகளுக்கும் அவர்தம் விலங்கினங்களுக்கும் ஆதார உணவாக, கால்நடைத் தீவனமாக பண்டுதொட்டு இன்றுவரை மக்களை வாழ்வித்துவரும் பாரம்பர்ய பொக்கிஷமாக இருக்கின்றன.

சிறிய விதைகளாக இருந்தாலும், கடினமான பாதுகாப்பு உறைகளைக் கொண்டிருக்கும். ஏன் தெரியுமா? பருவத்தே விதைத்த போதும், வானம் பார்த்த பூமியில் நீர்ப்பதம் கிடைக்கும் வரை அதுவும் போதுமானதாக அமையும் வரை தாக்குபிடிக்க வேண்டும் இல்லையா? முளைச்சு மட்டும் வந்துட்டா அதன் வீரியத்தை பார்க்கணுமே! கிருஷ்ணன் கர்ணனுக்கு காட்டிய விஸ்வரூபம் மாதிரி, இழைஇழையா, கிளைகிளையா, படர்ந்து பரவி அவற்றின் வேர்கள் மாயாஜாலம் காட்டிவிடும். சிறிய மண்துகளுக்கிடையில் வேர் முடியை தூதுவிடும்; பூமி ஒளித்து வைத்த கடைசி சொட்டு ஈரத்தையும் உறிஞ்சிவிடும். ‘நீ தொட்டுக்கொடுத்தா, நான் கொட்டிக் கொடுக்கிறேன்னு இந்த சிறுதானியங்கள் குறைந்த மண்வளத்திலும் நிறைஞ்ச விளைச்சலைக்கொடுக்கும் வல்லமை கொண்டவை. பொறுத்தார் பூமியாள்வார்ங்குறது சிறுதானியங்களுக்கே சொல்லப்பட்ட சொலவடையா இருக்கணும்.

ஈரம் இருக்கும் வரை மாய்ஞ்சு மாய்ஞ்சு வளரும். இவை ஒரு நீண்ட இடைவெளி கண்டால் பதுங்கி மீண்டும் வானம் பொழிந்ததும் மீண்டும் ஓங்கி வளரும்.

எல்லாச்சிறுதானியங்களுக்கும் பக்கத்தூர்விடும் தன்மை இருக்கிறது. முதல்தூர் பூத்தபிறகு மணிபிடித்து வளரக்கூடிய வகையில் மழையும் வளமும் இல்லாமல் போய்விட்டாலும், முழுப்பயிரும் பாழாகுறபடியா இல்லாம மழைவரத்துக்கேற்ப பக்கத்தூர்கள் வளர்ந்துவந்து மணிபிடிச்சு விளைச்சலுக்கு வரும். அறுவடைக்கு வராத தூர் வீணாக போவதே இல்லை.

தானியம் தப்பினா, தட்டையா விளைஞ்சு கால்நடைக்கு தீவனமா பலன் தரும். வெயில் மழைனு பார்க்காம ஓடா உழைக்கத்தயங்குற சம்சாரியை போலவே இச்சிறுதானியப் பயிர்களும் வறட்சியையும், வெப்பத்தையும் தாங்கி சூல்கொண்டு மணிபிடிக்கக் கூடியவை.

ஒரு கதிரில் விளையும் தானியங்களின் எண்ணிக்கை அதிகம். 200 முதல் 3,000 வரை இருக்கும். சீதோஷணம் வானிலையால் நஷ்டப்பட்டது போகவும் காக்கை குருவி கொண்டதுபோகவும் கூட, முதல் போட்டு உழைத்த உழவருக்கு அவர்பங்கு சேதாரம் இல்லாமல் கிடைக்கும்.

இத்தோடு  போகவில்லை இச்சிறுதானியங்களின் பங்கு. ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தைப் பேணிக்காப்பதைப்போல, இச்சிறுதானியப்பயிர்கள், அவரை, துவரை, மொச்சை போன்ற பயிர் வகைகளுடனும், ஆமணக்கு, பேயெள், நிலக்கடலை, சூரியகாந்தி போன்ற எண்ணெய்வித்துக்களுடனும் கூட இணங்கி, இசைந்து ஊடுபயிராகவோ – கலப்புபயிராகவோ விளைந்து வருமானம் ஈட்டக்கூடியது.

இவ்வளவும் மண்ணிலிருந்து சிறுதானியங்கள் பெற்றுக்கொள்வதோடு மண்ணிற்கும், இப்பயிர்களுக்குமான உறவு ஒருவழிப்பாதையானது அல்ல. வலைபோல் பின்னப்பட்ட இச்சிறுதானிய பயிர்களின் வேர் மண்அரிப்பை தடுத்து மண்வளத்தை காக்கின்றன. அவை மட்கி அதன் வளத்தையும் ஈடுகட்டுகின்றன.

மண்ணிலிருந்து பெற்ற சத்துக்களை இச்சிறுதானிய பயிர்கள் அவற்றை நமக்கு வரமாக அளிக்கின்றன. தானியப்பயிர்களுக்கே உரிய மாவுச்சத்து அதாவது சர்க்கரை சத்து இவற்றிலும் உண்டு.

இருப்பினும் அவை ஒரே சமயத்தில் செரிமானமாகி இரத்தஓட்டத்தில் அதிகப்படியான சர்க்கரைச்சத்தை சேர்க்காத வகையில் ஒருவலைபோன்ற அமைப்பில் இருப்பதால், நிதானமாக சிதைவுற்று நமக்குதேவையான சத்துக்களை சிறுதானியங்கள் படிப்படியாக வெளிப்படுத்துகின்றன.

இச்சிறுதானியங்களில் மாவுச்சத்துடன் நார்ச்சத்து, புரதச்சத்து, தாது உப்புக்கள், உயிர் சக்திகளான விட்டமின்கள் என்று எத்தனையோ நல்ல சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன. ஆனாலும் சரியான உணவுப்பழக்கங்களை நாம் மறந்துவிட்டோம்.

நொதித்தல் வினைக்குப்பிறகான மாவில், ஆவியில் வேகவைத்த இட்லி போன்ற பதார்த்தங்களையும் – புட்டு, கொழுக்கட்டை போன்ற உணவுகளையும் செய்து நாம் உட்கொள்ள வேண்டும். உணவுச்சத்தும், புரதச்சத்தும் சரியான விகிதத்தில் இணைந்த பனியாரம், அடை, ஆப்பம் போன்ற நிறைவான உணவு வகைகளை நாம் இன்று நேற்றா உண்டு களிக்கிறோம்?

மோரோடு பச்சை சின்ன வெங்காயத்தை இணைத்து குடிக்கும் கூழுக்கு ஈடு ஏது? சின்ன வெங்காயம் எவ்வளவு மகத்தான கிருமி நாசினி?

ஒருதானியத்தின் சத்து முழுக்க சரியான முறையில், பயன்பெறுவதென்பது – அதனை நாம் எந்த விதத்தில் சமைக்கிறோம், எந்த நேரத்தில் சமைக்கிறோம், எந்த நேரத்தில் உண்கிறோம், எதனோடு இணைத்து உட்கொள்கிறோம், எந்த பருவக்காலத்தில் எடுத்துக்கொள்கிறோம் என்று எத்தனையோ காரணிகளை கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.

முளைகட்டி, பால் எடுத்து – நார்ச்சத்தை குறைத்து இதமாக – ‘மால்ட்’ எனும் விதமாக   சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கீரை-காய்கறிகளுடன் அடை மற்றும் வடைகளாக சற்றே கூடுதலான எண்ணெய்ச் சத்துடன் சுவைமிக்க பதார்த்தங்களாக வளரும் சிறார்களுக்கு கொடுக்கலாம். ஆவியில் வேகவைத்த புட்டாகவும், இட்லியாகவும்

பெரியவர்கள் சாப்பிட வேண்டும். நமக்கெல்லாம் ‘உணவே மருந்து மருந்தே உணவு’. நம் உடலை நாம் உன்னிப்பாக கவனிக்க கற்றுக்கொண்டால் உணவால் பிரச்சனையே வராது. தாகம் உள்ளபோது மட்டும்தான் நீர்ப்பருக வேண்டும். அதே போல பசித்த பின்தான் உண்ண வேண்டும், அதையும் சத்தான சிறுதானிய உணவாக உட்கொண்டால் நல்லது.

சிறுதானிய சாகுபடிக்கு மிக குறைந்த நீராதாரமே போதுமானது. வறண்ட நிலங்களில் வளரக்கூடியது. சிறுதானியங்களுக்கு பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் தேவையில்லை.

எனவே மண்ணும், உண்ணும் உடலும் மலடாவதில்லை. உற்பத்தி செலவு மற்றும் மின்சார உபயோகம் குறையும். அத்தகைய மானாவாரிப் பகுதிகளில் வாழும் விவசாயிகள், நீர் மற்றும் இரசாயனங்களை அதிகம் உறிஞ்சக்கூடிய  நெல் மற்றும் கோதுமை பயிர்களை, மிகவும் கஷ்டப்பட்டு விளைவிக்க வேண்டிய தேவை இருக்காது. பலவிதமான சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மண்ணின் பன்மயத்தன்மையும் பாதுகாக்கப்படும்.

அரிசி, கோதுமை போன்ற பயிர்களை வலுக்கட்டாயமாக எல்லாவிதமான நிலத்திலும், காலநிலையிலும் பயிரிடத் தேவையில்லை. ஒட்டு ரக நெல், கோதுமை விதைகளை விவசாயிகள், நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஆனால் சிறுதானியங்களின் விதைகள் விவசாயிக்கே சொந்தம். இதனால், சிறு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios