
நாம் ஏதாவது நோய் என்று மருத்துவரிடம் சென்றாலே மருத்துவர்கள் நம்மிடம் சொல்லும் முதல் வார்த்தை உடல் எடையை குறையுங்கள் என்பதுதான். உடல் எடையைக் குறைக்க பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். சணல் விதைகள் உடல் எடைக் குறைப்பு பயணத்தில் ஒரு சிறந்த துணையாக விளங்குகிறது. இதில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து ஆகியவை பசியை கட்டுப்படுத்தவும், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை அளிக்கவும் உதவும். சணல் விதைகள் குறித்தும் அதில் இருக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் குறித்தும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தாவர அடிப்படையிலான புரதம் நிறைந்துள்ள ஒரு விதைகளாக சணல் விதைகள் விளங்குகிறது. இந்த புரதம் செரிமானமாக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் இது பசியை கட்டுப்படுத்துகிறது. சணல் விதைகள் நார்ச்சத்து நிறைந்த ஒரு விதைகள் ஆகும். இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் உள்ளது. இது செரிமான அமைப்பை சீராக்கி, மலச்சிக்கலை தடுக்கிறது. இதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. இதன் காரணமாக அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. இதில் இருக்கும் ஒமேகா 3, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உடலில் கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகின்றன. மேலும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதால் உடல் எடை அதிகரிக்காமல் குறையத் தொடங்குகிறது.
சணல் விதைகளை பல வழிகளில் நாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதை சமைக்க வேண்டிய அவசியம் இல்லை. பச்சையாகவோ அல்லது உணவு வகைகளில் கலந்தோ சாப்பிடலாம். ஊறவைத்த சணல் விதைகளை காலையில் ஸ்மூத்தி அல்லது ஜூஸுடன் கலந்து பருகலாம். இது நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். ஓட்ஸ் அல்லது வேறு ஏதேனும் கஞ்சி தயாரித்த பின்னர் அதன் மீது சணல் விதைகளை தூவி சாப்பிடலாம். மதிய அல்லது இரவு உணவுகளுக்கு எடுத்துக் கொள்ளும் சாலட்களிலும் சணல் விதைகளை தூவலாம். இது சாலட்க்கு ஒரு தனித்துவமான சுவையைக் கொடுக்கும். யோகர்ட் அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிடும் பொழுது ப்ரோபயாடிக் உடன் புரதம் மற்றும் நார்ச்சத்தும் நம் உடலுக்கு செல்லும்.
வீட்டில் தயாரிக்கப்படும் ரொட்டிகள் குக்கீஸ்கள் செய்யும் பொழுது அந்த மாவுடன் சணல் விதைகளை சேர்க்கலாம். அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் ஒரு கைப்பிடி சணல் விதைகளை சாப்பிடலாம். சூப்கள் மீது இந்த விதைகளை தூவி சாப்பிடலாம். பொதுவாக ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு மேசை கரண்டி (தோராயமாக 15 முதல் 30 கிராம்) சணல் விதைகள் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. முதலில் குறைந்த அளவில் தொடங்கி பின்னர் உடல் நிலைக்கு ஏற்றபடி படிப்படியாக அதிகரித்துக் கொள்ளலாம். இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சணல் விதைகளை வாங்கும் பொழுது உரிக்கப்பட்ட விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இவை சாப்பிடுவதற்கு எளிதாகவும், வயிறு கோளாறுகளை ஏற்படுத்தாமலும், செரிமானத்திற்கு உகந்ததாகவும் இருக்கும். காற்று புகாத கொள்கலனில் குளிர்ந்த, இருண்ட இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். எந்த ஒரு உணவையும் முயற்சிக்கும் முன்னர் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமைகள் அல்லது மருத்துவ நிலைமைகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணருடன் கலந்தாலோசிக்க வேண்டும். சணல் விதைகளை சாப்பிடுவது மூலம் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.
குறிப்பு: சணல் விதைகள் உடல் எடையை குறைப்பதற்கான ஆரோக்கியமான முறை என்றாலும், இது ஒரு நிரந்தர தீர்வு அல்ல. சீரான உணவு, போதுமான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரிவிகித உணவு முறை ஆகியவற்றுடன் சணல் விதைகளை இணைப்பதன் மூலம் சிறந்த பலன்களைப் பெறலாம். சணல் விதைகளை பயன்படுத்துவதற்கு முன்னர் மருத்துவரை கலந்தாலோசித்து முடிவெடுங்கள்.