
வெள்ளை சர்க்கரை உடலுக்கு கேடு தரும் ஒரு பொருளாக மாறிவிட்டது. நீரிழிவு தொடங்கி உடல் பருமன் வரை பல பிரச்சனைகளுக்கு வெள்ளை சர்க்கரை வழிவகுக்கிறது. இதற்கு மாற்றாக பல செயற்கை இனிப்பூட்டிகள் சந்தைகளில் கிடைத்து வருகின்றன. ஆனால் சர்க்கரைக்கு மாற்றாக குறைந்த கலோரி கொண்ட ஒரு அல்லுலோஸ் என்ற இனிப்பூட்டியை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அல்லுலோஸ் என்பது பிரக்டோஸ் போன்ற ஒரு மோனோசாக்கரெட் ஆகும். அதாவது இது ஒரு எளிய சர்க்கரை. இவை இயற்கையாகவே கோதுமை, அத்திப்பழம், சோளம் ஆகியவற்றில் காணப்படும். இது சர்க்கரையைப் போலவே தோற்றமளிக்கிறது. இயற்கையாகவே இனிப்பு சுவையுடன் விளங்குகிறது. இதன் கலோரி மதிப்பும் மிகக் குறைவு. சர்க்கரையில் ஒரு கிராமுக்கு நான்கு கலோரிகள் இருக்கும் நிலையில், ஒரு கிராமுக்கு 0.4 கலோரிகள் மட்டுமே உள்ளது. சர்க்கரையை விட 90 சதவீதம் குறைவான கலோரிகளை இது கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பாதுகாப்பானது.
சர்க்கரையைப் போலவே இது 70% இனிப்பு சுவையை கொண்டிருக்கும். மற்ற செயற்கை இனிப்பூட்டிகளான எரித்ரிட்டால், சோர்சிட்டால் மற்றும் ஸ்டீவியா போன்ற இனிப்பூட்டிகளைப் போல இது கசப்பான சுவையையோ அல்லது குளிர்ச்சியான உணர்வையோ ஏற்படுத்துவதில்லை. எனவே இது பேக்கிங் மற்றும் சமையலுக்கு ஏற்றதாக அமைகிறது. சர்க்கரையைப் போல் அல்லாமல் இந்த அல்லுலோஸ் உடலால் உறிஞ்சப்படாமல், செரிக்கப்படாமல் சிறுநீருடன் வெளியேறிவிடுகிறது. இதன் காரணமாக வயிற்று உபாதைகள் ஏற்படும் வாய்ப்புகளும் மிகக் குறைவாக இருக்கிறது. குறைந்த கலோரி கொண்டிருப்பதால் எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இனிப்புச் சுவையை தியாகம் செய்யாமல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது உதவுகிறது.
இந்த புதிய கண்டுபிடிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கு வரப் பிரசாதமாக அமைந்துள்ளது. இனிப்பு உணவுகளை அனுபவிக்க முடியாமல் தவித்து வருபவர்கள் சர்க்கரைக்கு மாற்றாக அல்லுலோஸ் எடுத்துக் கொள்ளலாம். வாய்வழி பாக்டீரியாக்கள் அல்லுலோஸை அமிலமாக மாற்ற முடியாது என்பதால் பல் சொத்தை ஏற்படுத்துவதில்லை. சர்க்கரையைப் போலவே இருப்பதால் இது உணவுப் பொருட்கள், பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இனிப்பு பொருட்கள் செய்யவும், யோகர்ட், ஐஸ்கிரீம் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் போன்றவற்றிலும் இதை பயன்படுத்தலாம். இது பாதுகாப்பானது என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு இது எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் பொழுது வயிற்று உப்புசம், வாய்வு அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம். தனித்துவமான பண்புகள் காரணமாக சர்க்கரைக்கு மாற்றாக வேகமாக வளர்ந்து வருகிறது. குறைந்த கலோரி, இரத்த சர்க்கரையில் தாக்கம் ஏற்படுத்தாது, சர்க்கரையை போன்ற சுவை ஆகியவற்றின் காரணமாக இதை பலரும் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துவதற்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. இருப்பினும் இனிப்பை தவிர்க்க முடியாதவர்கள் இது போன்ற செயற்கை இனிப்பூட்டிகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம். எந்த ஒரு உணவுப் பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனையும், அது உடலுக்கு ஒத்துக்கொள்கிறதா என்பதையும் கவனித்து பயன்படுத்த வேண்டியது அவசியம்.