இக்காலத்தில் இளைஞர்களிடம் புரோட்டீன் பவுடர் பயன்பாடு அதிகரித்துள்ளது. தசை வளர்ச்சிக்கு புரதம் தேவை என்றாலும், செயற்கை சப்ளிமெண்ட்ஸாக அதை அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது, அது கல்லீரலை சத்தமில்லாமல் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நமது உடல் புரதத்தை ஜீரணிக்கும்போது 'அம்மோனியா' என்ற நச்சுப் பொருள் உருவாகிறது. கல்லீரல் இந்த நச்சை 'யூரியா'வாக மாற்றி சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக புரோட்டீன் பவுடர் எடுக்கும்போது கல்லீரலுக்கு வேலைப்பளு அதிகமாகி, அதன் செல்களில் வீக்கம் (Inflammation) ஏற்படுகிறது.
26
கலப்படங்கள்:
பல வணிகரீதியான புரோட்டீன் பவுடர்களில் சுவைக்காகவும், கெட்டுப்போகாமல் இருக்கவும் செயற்கை இனிப்புகளும் பாதுகாப்பான்களும் சேர்க்கப்படுகின்றன. இதுமட்டுமன்றி, சில தயாரிப்புகளில் ஈயம், ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் கலந்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இவை கல்லீரலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி, மருந்துகளால் ஏற்படும் பாதிப்பைப் போன்ற ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
36
கல்லீரல் பலவீனம்:
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் ஆரம்பக்கட்ட ஃபேட்டி லிவர் (கல்லீரலில் கொழுப்பு படிதல்) பிரச்சனை இருக்கிறது. இந்த சூழலில், மருத்துவரின் ஆலோசனையின்றி அதிக கலோரிகள் கொண்ட 'மாஸ் கெய்னர்' (Mass Gainers) பவுடர்களை உட்கொள்ளும்போது, அது ஏற்கனவே பலவீனமாக இருக்கும் கல்லீரலை மிக வேகமாகப் பாதிப்படையச் செய்கிறது.
இயற்கையான உணவுகளை விடுத்து, புரோட்டீன் பவுடர்களை மட்டுமே முதன்மை உணவாகப் பயன்படுத்தும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின் பி, கோலின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைப்பதில்லை. இந்த ஊட்டச்சத்து பற்றாக்குறை கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டை முடக்குகிறது.
56
ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் :
அதிகப்படியான புரதத்தை உடல் உடைக்கும்போது, கல்லீரலில் 'ஃப்ரீ ரேடிக்கல்கள்' எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகள் அதிகமாக உற்பத்தியாகின்றன. இவற்றைத் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உணவுகள் இல்லாதபோது, இந்த அழுத்தம் கல்லீரல் செல்களைச் சேதப்படுத்தி, தழும்புகளை (Fibrosis) உருவாக்கி விடுகிறது.
66
நிபுணரின் எளிய ஆலோசனைகள்:
அளவு முக்கியம்: ஒரு முறைக்கு ஒரு ஸ்கூப் (சுமார் 20-25 கிராம் புரதம்) மட்டுமே பயன்படுத்தவும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
கல்லீரல் பரிசோதனை (LFT): புரோட்டீன் பவுடர்களைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், 6 மாதத்திற்கு ஒருமுறை 'லிவர் ஃபங்க்ஷன் டெஸ்ட்' (Liver Function Test) செய்துகொள்வது நல்லது.
அறிகுறிகளை கவனியுங்கள்: காரணமில்லாத சோர்வு, குமட்டல், வயிற்று அசௌகரியம் அல்லது கண்/சருமம் மஞ்சள் நிறமாக மாறுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பவுடர் எடுப்பதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுக வேண்டும்.