
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குழந்தைப் பருவம் என்பது மிக முக்கியமானது. இந்த பருவத்தில் குழந்தைகள் ஊர்ந்து செல்வது, எழுந்து நடப்பது, ஓடுவது, மேலே ஏறுவது, கீழே விழுவது போன்ற செயல்களை கற்றுக் கொள்கின்றனர். இப்படி செய்யும் போது அவர்களுக்கு காயங்கள் அல்லது எலும்புகள் உடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எலும்புகள் உடைந்தால் அது பிற்காலத்தில் அவர்களுக்கு கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கும், அவர்களுக்கு வலிமையான எலும்புகளை உருவாக்குவதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில டிப்ஸ்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கால்சியம் என்பது உடலுக்குத் தேவையான ஒரு தாதுப்பொருளாகும். குறிப்பாக எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க கால்சியம் உதவுகிறது. உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் எலும்புகள் பலவீனமடைந்து ஆஸ்டியோபோராசிஸ் என்கிற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு தினமும் சுமார் 1000 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படுகிறது. வயது வந்தவர்களுக்கு இதன் தேவை இன்னும் அதிகம். எலும்புகளின் வலிமையைக் கூட்டுவதற்கு, பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட பொருட்கள், கீரைகள், பாதாம், தானியங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் பாலில் 300 மில்லி கிராம் கால்சியமும், ஒரு கப் தயிரில் 400 மில்லி கிராம் கால்சியமும் உள்ளது.
எலும்புகளை ஆரோக்கியமாக வைப்பதற்கு வைட்டமின் டி பெருமளவில் உதவுகிறது. வைட்டமின் டி பற்றாக்குறை இருப்பவர்களின் எலும்புகள் மிகவும் பலவீனமாகக் காணப்படும். உடலில் கால்சியத்தை உறிஞ்சும் தன்மை வைட்டமின் டி க்கு உண்டு. முட்டை, கொழுப்பு நிறைந்த மீன், பால் போன்ற உணவுப் பொருட்களில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. காலை வேளையில் சிறிது நேரம் வெயிலில் நிற்பது வைட்டமின் டி-யை நம் உடலுக்குள் அனுப்புகிறது. வைட்டமின் டி குறைவாக இருப்பது தெரிந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி மிகவும் அவசியமாகும். எனவே குழந்தைகளை தினமும் காலை அல்லது மாலையில் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் விளையாட விட வேண்டும்.
எலும்பு வளர்ச்சிக்கு புரதங்கள் முக்கிய பங்காற்றுகிறது. பருப்பு வகைகள், பீன்ஸ், முட்டை, கோழி, மீன் ஆகியவற்றில் புரதங்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப அவர்களுக்கு புரதங்களை சரியான அளவில் கொடுக்க வேண்டும். அதேபோல் வைட்டமின் கே எலும்பு ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. பிரக்கோலி, முட்டைக்கோஸ், கீரைகள் ஆகிய உணவுகளில் வைட்டமின் கே நிறைந்துள்ளது. கால்சியம், வைட்டமின் டி, புரதம் ஆகியவற்றுடன் சேர்த்து மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பிற தாதுக்களும், வைட்டமின்களும் எலும்பு வளர்ச்சிக்கு அவசியம். எனவே குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதச்சத்து உணவுகள் என சமச்சீர் உணவுகளை வழங்க வேண்டும்.
எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு அதிக சர்க்கரை சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். சோடா பானங்கள், காஃபின் நிறைந்த உணவுகள், உடல் கால்சியம் உறிஞ்சதலை பாதிக்கலாம். எனவே குழந்தைகளுக்கு இது போன்ற உணவுகளை தவிர்ப்பது அவசியம். உணவுகளுடன் சேர்த்து உடல் செயல்பாட்டையும் அதிகரிக்க வேண்டும். குழந்தைகள் போதுமான நேரம் தூங்குகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் தூக்கம் மிக அவசியமாகும். குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியமாக வளர்வதற்கு ஓடுதல், குதித்தல், விளையாடுதல் போன்ற உடல் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இது எலும்புகளை வலுப்படுத்துவதோடு, எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது அவர்களின் எலும்பு மற்றும் தசைகளை பலவீனமாக்கும். எனவே குழந்தைகளை ஒரே இடத்தில் அமர வைப்பது, கையில் மொபைலை கொடுத்து வீடியோக்களை பார்க்க வைப்பது போன்ற வேலைகளை குறைத்து, மற்ற செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அவர்களை வெளியில் சென்று விளையாட அனுமதிக்க வேண்டும். விளையாட்டுப் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகள், பிற்காலத்திலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே அவர்கள் விளையாடும் பொழுதும் ஓடும் பொழுதும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.
குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடுவதற்கும், எலும்பு முறிவுகள் ஏற்படாமல் இருப்பதற்கும், காலணிகளை சரியாக தேர்வு செய்ய வேண்டியது அவசியம். கால்களுக்கு நன்கு பொருந்தும் வகையிலான காலணிகள் அல்லது ஷூக்களை கொடுக்க வேண்டும். இது அவர்கள் நடக்கும் போது அல்லது விளையாடும் பொழுது கீழே விழும் அபாயத்தை குறைக்கிறது. சைக்கிள் ஓட்டுதல், ஸ்கேட்டிங், கால்பந்து விளையாடும் பொழுது குழந்தைகள் ஹெல்மெட், முழங்கை, முழங்கால் பேட்கள் ஆகியவற்றை அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது எலும்பு முறிவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்.
குழந்தைகள் கீழே விழும் பொழுது எப்படி பாதுகாப்பான முறையில் விழ வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும். கீழே விழும் சூழலை எப்படி கையாள வேண்டும்? எப்படி பாதுகாப்பான முறையில் சுதாரித்து விழவேண்டும்? என்பது குறித்து குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அவர்களின் உடல் எடையில் 15 சதவீதத்திற்கு மேல் அவர்களின் பேக் இருக்கக் கூடாது. இது அவர்களின் தோள்பட்டை மற்றும் முதுகு எலும்புகளை சேதமடைய செய்யலாம். எனவே பேக்குகளின் இரண்டு பட்டைகளும் தோளில் சரியாக பொருந்தி கொள்ளுமாறும் அதிக கனமான பேக்குகளை பயன்படுத்தாதவாறு பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.