
தற்போது கணினி இல்லாத துறையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டன. அரசுத் துறைகள் கூட கணினி மயமாக்கப்பட்டுள்ளன. தனியார் அல்லது அரசு என எந்த துறைக்குச் சென்றாலும் கணினியை பயன்படுத்தியே தீர வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிக நேரம் கணினியை பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் பலருக்கும் கண்களில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. கண் வறட்சி என்பது பொதுவான பிரச்சனையாக மாறி உள்ளது. கண் வறட்சி எதனால் ஏற்படுகிறது? இதன் அறிகுறிகள், காரணங்கள், தீர்வுகள் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கணினியின் திரையை உற்றுப் பார்க்கும் பொழுது நாம் வழக்கத்தை விட குறைவாக கண்களை சிமிட்டுகிறோம். பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 15 முதல் 20 முறை கண் சிமிட்ட வேண்டும். ஆனால் கணினி முன் அமர்ந்திருக்கும் பொழுது இது பாதியாக குறையலாம். கண் சிமிட்டுவது கண்களில் நீரை பரப்பி ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. ஆனால் கண் சிமிட்டுவது குறையும் பொழுது வறட்சி ஏற்படுகிறது. திரையிலிருந்து வெளிவரும் அதிக வெளிச்சம் அல்லது குறைந்த வெளிச்சம் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கணினி திரையிலிருந்து கண்கள் சரியான தூரத்திலும், கோணத்திலும் இல்லாதது கண் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கலாம். ஏசி அல்லது மின்விசிறியில் இருந்து வெளிவரும் காற்றும் கண்களை வறட்சியாக்கலாம். கணினி திரையிலிருந்து வெளிப்படும் நீல ஒளி கண்களை சோர்வடையச் செய்து வறட்சியை அதிகரிக்கும்.
கண்கள் வறட்சி அடையும் பொழுது சில அறிகுறிகள் தென்படும். கண்களில் மணல் அல்லது தூசி விழுந்தது போன்ற உணர்வு, கண்களில் எரிச்சல் அல்லது கொட்டுவது போன்ற உணர்வு, கண்கள் சிவந்து போதல், நாளின் முடிவில் மங்கலான பார்வை, கண் சோர்வு அல்லது வலி, கண்களை திறந்து வைப்பதில் சிரமம், ஒளிக்கு அதிக உணர்திறன், சில நேரங்களில் வறட்சிக்கு எதிர்வினையாக கண்களில் இருந்து அதிகமாக நீர் வடிதல், அதிக தலைவலி அல்லது கழுத்து வலி ஆகியவை வறட்சியான கண்களுக்கான அறிகுறிகள் ஆகும். கணினி பயன்பாட்டால் வரும் கண் வறட்சியை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் பல வழிகள் உள்ளன அதில் முதலில் நாம் பின்பற்ற வேண்டியது 20-20-20 விதி. இது பயனுள்ள மற்றும் எளிதான ஒரு வழி ஆகும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும். இது கண்களுக்கு ஓய்வளித்து கவனம் செலுத்தும். தசைகளை தளர்த்தும்.
கணினி பயன்படுத்தும் பொழுது அடிக்கடி கண் சிமிட்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இது கண்ணீரை கண்கள் முழுவதும் பரப்பி ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். மருத்துவரின் ஆலோசனையின் படி செயற்கை கண்ணீர் சொட்டுகளை பயன்படுத்தலாம். இது கண்களை ஈரமாக வைத்திருக்க உதவும். சில சொட்டு மருந்துகளுக்கு மருத்துவ சீட்டு தேவைப்படலாம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்துகளை வாங்கி கண்களில் ஊற்றுதல் கூடாது. கணினி திரையை கண்களில் இருந்து 20 முதல் 30 அங்குல தூரத்தில் வைக்க வேண்டும். திரையின் மேல் பகுதி உங்கள் கண் மட்டத்திற்கு சற்று 15 டிகிரி சாய்வாக கீழே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அறையின் வெளிச்சம் அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இல்லாமல் கண்களுக்கு இதமான அளவில் இருக்க வேண்டும். திரை பிரதிபலிப்பு (கிளார்) இல்லாமல் இருப்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
கணினி அல்லது மொபைல் திரைகளில் கொடுக்கப்பட்டுள்ள நீல ஒலி வடிகட்டிகளை பயன்படுத்தலாம். நைட் மோட் போன்ற ஆப்ஷன்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லது நீல ஒளி வடிகட்டும் கண்ணாடிகளை அணிந்து கொள்ளலாம். கண்கள் வறண்டு போகாமல் இருப்பதற்கு உடலும் நீரேற்றமாக இருக்க வேண்டியது அவசியம். உடல் நீரேற்றமாக வைத்துக் கொண்டால் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியமும் மேம்படும். கண்களில் வறட்சி ஏற்படுவதும் குறையும். எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சால்மன், கானாங்கெளுத்தி, ஆளி விதைகள், சியா விதைகள், வால்நட்ஸ் போன்ற ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பது கண்களின் தரத்தை மேம்படுத்தும். இதனால் கண் வறட்சி குறையும். இதை எடுக்க முடியாதவர்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து நன்றாக பிழிந்து சூடு பொறுக்கும் வண்ணம் எடுத்து கண்களில் ஒத்தடம் கொடுக்கலாம். இது கண் இமைகளில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை திறந்து கண்ணீரின் எண்ணெய் படலத்தை மேம்படுத்தும். புகை, தூசி, உலர் காற்று போன்ற காரணிகளிலிருந்தும் கண்களை பாதுகாப்பது வறட்சியை தடுக்க உதவும். இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுது பாதுகாப்பு கண்ணாடிகளை அணிய வேண்டியது அவசியம். போதுமான அளவு கண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். அப்போதுதான் கண்கள் புத்துணர்ச்சி பெறும். தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். கண் வறட்சி அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம். மருத்துவர் சரியான காரணங்களை கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை மற்றும் சொட்டு மருந்துகளை பரிந்துரைப்பார். சுய மருத்துவம் செய்தல், மருந்தகங்களில் இருந்து மருந்துகளை வாங்கி ஊற்றுதல் ஆகியவை கண்டிப்பாகக் கூடாது.