இறைச்சி சாப்பிடும் பலரும் காடையை அதிக அளவில் விரும்பி சாப்பிடுவதில்லை. கோழியை விட சிறியதாகவும், ஆனால் தனித்துவமான சுவையும் கொண்டதுமான காடை இறைச்சியில் பல சத்துக்கள் உள்ளன. அது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
காடை அளவில் சிறியதாக இருப்பினும் சுவையும் சத்தம் நிறைந்தது. “நோய்களால் உடல் இளைத்த ஒருவன் காடை இறைச்சியுடன் சோறு சாப்பிட்டால் கட்டழகன் ஆவான்” என ஒரு தமிழ் நூலில் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. கோழி இறைச்சியை ஒப்பிடும் பொழுது மிகக் குறைவான கொழுப்பும் ஏராளமான சத்துக்களும் காடையில் உள்ளன. குறிப்பாக மூளைக்கு தேவையான வைட்டமின்கள் ஏ, பி, டி, கே, கோலின் சத்து, புரதம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் அதிக ஒலிக் அமிலம் இருப்பதால் இதய நோய் அபாயமும் குறைகிறது. காடை நீரிழிவு நோயாளிகள், இதய நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கும் ஏற்ற உணவாக இருக்கிறது.
24
காடையில் உள்ள சத்துக்கள்
காடை புரதத்தின் சிறந்த மூலமாகும். 100 கிராம் இறைச்சியில் சுமார் 22 கிராம் புரதம் உள்ளது. இது தசை வளர்ச்சி செல்களின் வளர்ச்சிக்கும் மற்றும் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளுக்கும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. இதில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் அளவு குறைவாக உள்ளது. பாலிஅன்சாச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வை, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் இருக்கும் b1, b2, b3 போன்ற வைட்டமின்கள் வளர்சிதை மாற்றத்திற்கும் ஆற்றல் உற்பத்திக்கும் உதவுகின்றன. வைட்டமின் கே, டி, இ எலும்பு ஆரோக்கியம், ரத்தம் உறைதல், ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்புகளுக்கு பெயர் பெற்றவை. வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும், ரத்த சிவப்பணு உற்பத்திக்கும் உதவுகிறது.
34
ரத்த சோகையை தடுக்கும் காடை உணவு
இதில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சோகையை தடுக்கவும், துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செலினியம் செல்கள் சேதம் அடைவதை தடுக்கவும், பாஸ்பரஸ் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்குகிறது. மெக்னீசியம் தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும் இதில் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இதேபோல் காடை முட்டைகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நரம்பு மண்டலத்தையும் உறுதிப்படுத்துகின்றன. இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் உடலில் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க உதவுகிறது. ரத்தசோகை இருப்பவர்களுக்கு காடை ஒரு சிறந்த உணவாக இருக்கும்.
காடை முட்டையை காச நோய், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு சிகிச்சையில் சிறந்த மருந்தாக சீனர்கள் பயன்படுத்துகின்றனர். சிறுநீரகம், கல்லீரல், பித்தப்பை ஆகியவற்றில் உருவாகும் கற்களையும் காடை முட்டைகள் தடுக்கும் என்று கூறப்படுகிறது. ஜப்பான், மெக்சிகோ, இத்தாலி, பிரான்ஸ், போலந்து போன்ற நாடுகளில் காடை மிகவும் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாக உள்ளது. விலை குறைவானதாகவும் அதே சமயம் சத்துக்கள் மிகுந்த காடை இறைச்சியை ஒரு முறையாவது வாங்கி சமைத்துப் பாருங்கள். இதை பல்வேறு முறைகளில் சமைத்து உண்ணலாம். இருப்பினும் எந்த உணவையும் சரியான அளவில் சுகாதாரமான முறையிலும் சமைத்து உட்கொள்ள வேண்டியது அவசியம்.