
பல வீடுகளில் காலை டிபனே இட்லி சாம்பார் தான். அதை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். ஆனால் இட்லியையும் சாம்பாரையும் சமைப்பதை விட, இட்லியை தட்டில் ஒட்டாமல் எடுப்பது கடினமான காரியம். எவ்வளவு முயன்றாலும் சிலர் இட்லியில் சொதப்பிவிடுவார்கள். அவித்த இட்லியை எடுக்கும் போது அது துணியில் ஒட்டிக் கொள்ளும். இட்லியை தட்டில் இருந்து எடுக்க சிரமமாக இருக்கும். பாதி இட்லிதான் கைக்கு வரும். இட்லியை எளிதில் இட்லி தட்டில் இருந்து எடுப்பதற்கு சிறந்த டிப்ஸ்களை இங்கு காணலாம்.
தட்டில் கொஞ்சம் கையில் கொஞ்சம் என அரைகுறையாக எடுத்த இட்லி விரல்களில் ஒட்டிக் கொள்ளும். போஸ்டர் ஒட்டும் பசை போல குழைந்த இட்லியை சாப்பிட ஆர்வம் வராது. இதை தடுக்க சில எளிய நடைமுறைகள் உள்ளன.
இதையும் படிங்க: இட்லி மாவு புளிச்சு போச்சா? இந்த ட்ரிக்க ஃபாலோ பண்ணுங்க இட்லி டேஸ்ட்டா இருக்கும்!
தட்டில் ஒட்டாத இட்லிக்கு டிப்ஸ்:
இட்லி பாத்திரத்தை இறக்கிய உடன் அதில் இட்லியை எடுக்கக் கூடாது. சூடான இட்லி தட்டினை எடுத்து அதன் பின்புறம் ஓடும் குழாய் நீரை காட்டவேண்டும். இதன் காரணமாக இட்லி தட்டின் வெப்பம் குறையும். பின்னர் ஒரு கரண்டியைக் கொண்டு இட்லியை எடுக்க வேண்டும். இதனால் தட்டில் கொஞ்சம் கூட ஒட்டாமல் இட்லி வந்துவிடும். பார்க்கும்போதே எடுத்து உண்ணும் ஆர்வம் ஏற்படும்.
பஞ்சு போல இட்லி சுட டிப்ஸ்:
இந்த டிப்ஸ் ஒரு பாட்டி சொன்னது. இட்லி பஞ்சு மாதிரி வர 1 கிண்ண அவலை எடுத்து ஊறவைக்க வேண்டும். அதை மாவாக அரைத்து இட்லி மாவுடன் கலந்தால் மென்மையான பஞ்சு இட்லி தயார்.
இதையும் படிங்க: இட்லி சிறந்த உணவாக இருந்தாலும் 'இப்படி' சாப்பிட்டா மட்டும் தான் ஆரோக்கியம்.. இல்லன்னா வேஸ்ட்!!
இட்லி மாவு அரைக்க டிப்ஸ்!
1). இட்லி மாவு அரைத்த பின் அதில் உப்பு போட்டு புளிக்க வைக்க வேண்டும். இதனால் இட்லி பஞ்சு போல பொசு பொசுவென வரும்.
2). மாவு நன்கு புளித்துவிட்டால் அதை கலக்கிவிடாமல் அப்படியே இட்லி ஊற்ற வேண்டும். இப்படி செய்தால் இட்லி மென்மையாக இருக்கும்.
3). இட்லிக்கு அரைக்கும் மாவில் உளுந்த மாவு எப்போதும் புளித்து போகக் கூடாது.
4). இட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும்போது 4 கப் அரிசி போட்டால் ஒரு கப் உளுந்து என ஊற வைத்து அரைக்க வேண்டும். அப்படி அரைப்பதால் இட்லி நன்றாக வரும்.
5). இட்லி மாவு கரைக்கும்போது கல் உப்பு போடவேண்டும். இந்த மாவு ரொம்ப தண்ணீராக அல்லது கெட்டியாக இருக்கக் கூடாது. நடுநிலை பதத்தில் இருக்கலாம். இட்லி மாவை கரண்டியில் எடுக்கும்போது ரிப்பனை போல நீளமாக தட்டில் விழுவது தான் இட்லி மாவு பதம்.
6). வெறும் அரிசி ,உளுந்து மட்டுமின்றி ஜவ்வரிசி ஊறவைத்தும் இட்லி மாவு அரைக்கலாம். இந்த மாவில் இட்லி அவித்தால் பொசுபொசுவென இருக்கும்