TikTok, Insta-வில் வைரலாகும் 'லிம்பாடிக் வாக்கிங்' (Lymphatic Walking) உடலின் நச்சுகளை வெளியேற்றுமா? சாதாரண நடைபயிற்சியை விட இது எந்தளவு வேறுபட்டது மற்றும் இதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகளை இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
'லிம்பாடிக் வாக்கிங்' என்பது உடலிலுள்ள நிணநீர் மண்டலத்தை (Lymphatic System) தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சிறப்பு நடைபயிற்சி முறையாகும். நமது உடலில் திரவம், கழிவுகள் மற்றும் நோய் எதிர்ப்புச் செல்களைக் கொண்டு செல்லும் இந்த மண்டலத்தைச் சீராக்கி, உடலில் தேங்கும் வீக்கத்தைக் குறைப்பதே இதன் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
26
சோஷியல் மீடியாவில் இது ஏன் வைரலானது?
டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இந்த நடைபயிற்சி தொடர்பான வீடியோக்கள் மில்லியன் கணக்கில் பார்க்கப்பட்டுள்ளன. கிம் கர்தாஷியன், ஹேலி பீபர் போன்ற பிரபலங்கள் நிணநீர் மசாஜ் (Lymphatic Massage) சிகிச்சைகளைப் பயன்படுத்துவதால், அதற்கு மாற்றாக வீடே தேடி வந்த இலவச மற்றும் எளிய தீர்வாக இந்த 'லிம்பாடிக் வாக்கிங்' ட்ரெண்ட் மக்களிடையே பிரபலமடைந்தது.
36
இதைச் செய்யும் சரியான முறை என்ன?
இந்த நடைபயிற்சியை விளக்குபவர்கள் சில எளிய விதிகளைப் பரிந்துரைக்கின்றனர்:
கையில் மொபைல் போன் வைத்திருக்காமல், தோள்களைத் தளர்த்தி நிமிர்ந்து நிற்க வேண்டும்.
நடக்கும்போது கைகளை இயல்பாகவும் சுதந்திரமாகவும் முன்னும் பின்னும் வீசி நடக்க வேண்டும்.
உடற்பகுதியை (Torso) லேசாக சுழற்றி, மெதுவாகவும் ஆழமாகவும் மூச்சை இழுத்து விட்டு சீரான வேகத்தில் நடக்க வேண்டும்.
இதயத்தைப் போல நிணநீர் மண்டலத்திற்குத் இரத்தத்தை உந்தித்தள்ளும் 'பம்ப்' (Pump) எதுவும் கிடையாது. தசைகளின் சுருக்கம், இயக்கம் மற்றும் மூச்சுப் பயிற்சி மூலம் மட்டுமே நிணநீர் நகர்கிறது. ஆய்வுகளின்படி, உடற்பயிற்சியின் போது நிணநீர் நாளங்கள் விரிவடைந்து கழிவு அகற்றுவது உண்மைதான். ஆனால், சோஷியல் மீடியாவில் சொல்வது போன்ற பிரத்யேக தோரணைகள் மட்டுமே இதைச் செய்யும் என்பதற்குத் தனியான மருத்துவச் சான்றுகள் எதுவும் இல்லை.
56
உடலுக்கு நிஜமாகவே நச்சு நீக்கம் (Detox) நடக்குமா?
நீங்கள் இயல்பாக நடைபயிற்சி செய்யும்போதே உடலின் தசைகள் இயங்கி நிணநீர் ஓட்டம் சீராகிவிடும். எனவே, கைகளை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வீசி நடப்பதால் மட்டும் கூடுதல் கொழுப்பு கரையோ அல்லது உடனடி நச்சு நீக்கமோ (Detox) நடந்துவிடாது. இதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லை.
66
யாருக்கெல்லாம் இது பயனுள்ளது?
கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள், நல்ல தோரணையுடன் (Posture) கைகளை வீசி நடப்பது உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். ஆனால் 'லிம்போடீமா' (Lymphedema) போன்ற நிணநீர் சார்ந்த நோய் பாதிப்பு உள்ளவர்கள் சமூக வலைத்தளப் போக்கைப் பின்பற்றாமல் மருத்துவ வழிகாட்டுதலைப் பெற வேண்டும். மற்றவர்களுக்கு, எந்தவித ஆடம்பரப் பெயரும் இல்லாத வழக்கமான தினசரி நடைபயிற்சியே போதுமானது.