என்னுடைய மாணவர் என்றே கூறுவார்! வெற்றி துரைசாமிக்கு நினைவாஞ்சலியில் கலங்கிய இயக்குனர் வெற்றிமாறன்!

First Published Feb 15, 2024, 7:45 PM IST

 இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகம் [IIFC] சார்பில், சமீபத்தில் அகால மரணம் அடைந்த வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு,இயக்குனர் வெற்றிமாறன்,அவரது மனைவி ஆர்த்தி வெற்றி மாறன்,பேராசிரியர் ராஜநாயகம், முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன்குமார், மருத்துவர் வந்தனா,ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய தயாரிப்பாளர் தாணு "வெற்றி துரைசாமி மறைவால் மிக மிக சொல்லொணாத் துயரத்திற்கு ஆளானேன்.அவருடன் பழகிய காலங்கள் சிறப்பான காலங்கள் ஆகும். இந்த பன்னாட்டு திரை மற்றும் பண்பாடு ஆய்வகம் திறப்பதற்கு நான் கொடுத்த தொகை மிகப் பெரிய உதவியாக இருந்ததாக மீண்டும் மீண்டும் நன்றி கூறினார். எப்பொழுது எனக்கு ஒரு கதையை தயார் செய்யப் போகிறாய் என்று நான் கேட்டதற்கு,வெற்றி துரைசாமி  வெற்றிமாறனின் முழு சம்மதத்துடன் தான் தங்களிடம் வந்து படத்திற்கான கதையை கூறுவேன் என்று கூறினார். பக்தியுடனும் பாசத்துடனும் வெற்றிமாறன் அவர்களை குருவாக பாவித்துக் கொண்டிருந்தார். அவருடைய தந்தையார்  எனக்கு மிகவும் நெருக்கமானவர், அவருக்கு இது பேரிழப்பாகும் எந்த தந்தைக்கும் இப்படி ஒரு துயரம் நிகழக் கூடாது", என்று கூறினார்.

ஆர்த்தி வெற்றிமாறன் பேசும் பொழுது," முதன்முறையாக 2012-ஆம் ஆண்டு தான் சந்தித்தோம். இந்த IIFC-தான் அவருடன் பயணிக்க காரணமாக இருந்தது. இந்த இடத்தை அவர் IIFC-க்காக கொடுத்து வகுப்பு எடுக்கவும், இதை நடைமுறைப்படுத்தவும் நிறைய ஆலோசிக்க வேண்டி இருந்தது. அவர் மிகவும் எளிமையான மனிதர் எளிதில் அணுகக் கூடியவர். எங்களுக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த நிறுவனத்தை இந்த அளவுக்கு கொண்டு வருவதற்கு அவரால் மட்டுமே சாத்தியமானது. அவர் குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்,"என்றார்.

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் தடை நீக்கம்! தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியானது!

இறுதியாக இயக்குனர் வெற்றிமாறன் பேசும்பொழுது," திரு.வெற்றி துரைசாமி அவர்கள் சினிமா சம்பந்தப்பட்ட இடங்களில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொழுது என்னுடைய மாணவர் என்று அறிமுகப்படுத்திக் கொள்வார். ஆனால் அவரிடம் நான் தான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். எங்களிடம் நிறைய ஒத்துப் போகக்கூடிய பொதுவான பிடித்த விஷயங்கள் இருந்தன. அவை அனைத்தைப் பற்றியும் பேரார்வத்துடன் தெரிந்து வைத்திருப்பது மட்டுமல்லாமல் அதற்கான தேடல் அதிகமாக உள்ள மனிதர் அவர். 

அவர் ஒரு சிறந்த 'வைல்ட் லைஃப்' புகைப்படக் கலைஞர் ஆவார். ஏற்கனவே நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் சார்பில் சிறந்த புகைப்பட கலைஞராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான பயணம் மேற்கொண்ட போது தான் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. என்னுடைய ஒவ்வொரு செயல்களிலும் அவருடைய பங்களிப்பு எப்பொழுதும் இருந்துள்ளது. நாங்கள் IIFC உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்த பொழுது அவர்  தடையேதும் இல்லாமல் இங்கே செயல்படுத்தலாம் என்று கூறியது மட்டும் இல்லாமல் அவருடைய தொடர் ஆர்வத்தை இங்கே காண்பித்துக் கொண்டே இருந்தார். இப்படி ஒரு பேருதவி எல்லாராலும் முடியாது, இப்படி இன்னொருவரின் கனவில் பேரார்வத்துடன் செயலாற்றுவது என்பது எல்லாராலும் முடியாது.எப்போதுமே உதவி கொண்டே இருக்கக்கூடிய மனநிலையில் உள்ளவர்களால் மட்டுமே முடியும். அவருடைய மறைவு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது, அவரது மறைவை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இந்த மாதிரியான காலகட்டங்களில் துணிச்சலாக எடுத்து வைக்கும் முன்னகர்வுகள் தான் நம்மையும் சமூகத்தையும் நம்மை விட்டு சென்றவர்களையும் நிலை நிறுத்தக் கூடியதாக இருக்கும்.

Serial Top 10 TRP: தடாலடியாக டாப் 10 TRP-யில் இடம்பிடித்த ஜீ தமிழ்! விஜய் டிவி - சன் டிவி சீரியல்களுக்கு டஃப்!

வெற்றி துரைசாமி நினைவாக IIFC சார்பாக முதல் திரைப்படம் எடுப்பவர்களுக்கும் 'வைல்டு லைஃப்' புகைப்பட கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். சிலரின் மறைவுதான் நம்மில் பாதியை எடுத்து சென்று விடும் அப்படி ஒரு மறைவுதான் திரு.வெற்றி துரைசாமியின் மறைவு" என்று தன் அஞ்சலியை நிறைவு செய்தார்.
 

click me!