மஞ்சும்மல் பாய்ஸை ஓரம்கட்டுமா பா.இரஞ்சித் படம்? இந்தவார தியேட்டர் மற்றும் OTT ரிலீஸ் படங்களின் முழு லிஸ்ட் இதோ

First Published Mar 7, 2024, 10:35 AM IST

பா.இரஞ்சித் தயாரித்த ஜே பேபி முதல் ரஜினிகாந்தின் லால் சலாம் வரை இந்த வார மகளிர் தின ஸ்பெஷலாக தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

Theatre and OTT release Tamil Movies on March 8

தமிழ் சினிமாவில் தற்போது தரமான படங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் வெளிவந்த படங்கள் அனைத்தும் சொதப்பியதால், வேறு வழியின்றி மலையாள படத்தை கொண்டாடி வருகிறார்கள் தமிழ் மக்கள். தற்போது தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் மஞ்சும்மல் பாய்ஸின் ராஜ்ஜியம் தான். அப்படத்தின் வேகத்தை குறைக்கும் முனைப்போடு இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் பற்றி பார்க்கலாம்.

ஜே பேபி (J Baby)

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் தான் ஜே பேபி. அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஊர்வசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுரேஷ் மாரி இயக்கியிருக்கும் இப்படம் வருகிற மார்ச் 8-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

கார்டியன் (Guardian)

நடிகை ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் தான் கார்டியன். இப்படத்தை வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் தயாரித்துள்ளார். சபரி மற்றும் குரு சரவணன் இணைந்து இயக்கியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து உள்ளார். இப்படமும் மார்ச் 8-ந் தேதி திரைக்கு வருகிறது.

சிங்கப்பெண்ணே (Singappenney)

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் நாயகி ஷில்பா மஞ்சுநாத் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் தான் சிங்கப்பெண்ணே. ஜேஎஸ்பி சதீஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு குமரன் சிவமணி இசையமைத்து உள்ளார். இப்படமும் மகளிர் தினமான மார்ச் 8-ந் தேதி தான் திரைகாண உள்ளது.

இதையும் படியுங்கள்... லால் சலாம் சொதப்பியதற்கு காரணம் ரஜினிகாந்த் தானா? மொய்தீன் பாய் கேரக்டர் பற்றி ஐஸ்வர்யா சொன்ன அதிர்ச்சி தகவல்

அரிமாபட்டி சக்திவேல் (Arimapatti Sakthivel)

ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் அரிமாபட்டி சக்திவேல். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் சார்லி, பிர்லா போஸ், மேகனா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படமும் மார்ச் 8-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே (Nalla Perai Vaanga Vendum Pillaigale)

பிரசாந்த் ராமர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள திரைப்படம் தான் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே. பல்வேறு உணர்வுப்பூர்வமான பாடல்களை பாடிய புகழ்பெற்ற பாடகர் பிரதீப் குமார் தான் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படமும் வருகிற மார்ச் 8-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

ஓடிடி ரிலீஸ் படங்கள்

லால் சலாம், லவ்வர் மற்றும் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய மூன்று படங்கள் மார்ச் 8-ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளன. இதில் லால் சலாம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் மணிகண்டன் நடித்த லவ்வர் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியிலும், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... “இப்பவும் பிரபு எனக்கு டார்லிங் தான்.. இது அவரு மனைவிக்கே தெரியும்” பிரபல நடிகை ஓபன் டாக்..

click me!