திமுக எம்எல்ஏ உயிரிழப்புக்கு இதுதான் காரணமா? யார் இந்த புகழேந்தி? அரசியலில் கடந்து வந்த பாதை!

First Published Apr 6, 2024, 11:57 AM IST

நேற்று முதல்வரின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த போது மயங்கி விழுந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ponmudi

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட அத்தியூர் திருவாதியைச் சேர்ந்த புகழேந்தி விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர். முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தீவிர விசுவாசி. 1973-ம் ஆண்டு கிளைக் கழகச் செயலாளராக கட்சியில் சேர்ந்த இவர், 1980-86 காலகட்டங்களில் மாவட்டப் பிரதிநிதியாக இருந்தார். 1989-ல் பொன்முடி முதல் முறையாக விழுப்புரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்காக கடுமையாக தேர்தல் பணி செய்தவர். அதற்கு நன்றிக்கடனாக இவருக்கு 1996-ல் கோலியனூர் ஒன்றிய சேர்மன் பதவியையும் 2006-ம் ஆண்டு இவரின் மருமகளுக்கு சேர்மன் பதவியையும் வழங்கி பொன்முடி அழகு பார்த்தார் 

Vikravandi DMK MLA Pugazhendhi

மேலும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளராகவும் விக்கிரவாண்டி திமுக ஒன்றியச் செயலாளராக 3 முறை பதவி வகித்துள்ளார். 2016 நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலேயே விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட புகழேந்தி வாய்ப்பு கேட்டிருந்தார். அப்போது வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ ராதாமணி மறைவை அடுத்து 2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட புகழேந்தி தோல்வியை தழுவினார். 

Pugazhendhi

இருப்பினும் புகழேந்தியின் உழைப்பின் மீது நம்பிக்கைக் கொண்ட பொன்முடி 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புகழேந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினார். அதனை பயன்படுத்திக் கொண்ட புகழேந்தி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். பின்னர் விழுப்புரம் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இதனிடையே எம்எல்ஏ புகழேந்திக்கு கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கட்சி பணியிலும் தீவிரம் காட்டி வந்தார். குறிப்பாக மக்களவைத் தேர்தலுக்காக தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

Mundiyampakkam Government Hospital

நேற்று மாலை முதல்வர் விழுப்புரத்தில் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட புகழேந்திக்கு திடீரென மயங்கினார். இதனையடுத்து அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

DMK MLA Pugazhendhi Passes Away

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்த சம்பவம் திமுக மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமைச்சர் பொன்முடி தனது தீவிர விசுவாசியை இழந்துவிட்ட மீளமுடியாத துயரத்தில் இருந்து வருகிறார்.  உயிரிழந்த திமுக எம்எல்ஏ புகழேந்திக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், செல்வகுமார் என்ற மகனும். செல்வி, சாந்தி, சுமதி என்ற மகள்களும் உள்ளனர்.

click me!