”கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட இடங்கள்.... ஒரு பார்வை!!

First Published Feb 15, 2023, 7:54 PM IST

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தின் கீழ், முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தின் கீழ், முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, முதியோர் ஓய்வூதியம் எத்தனை நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது, நிலுவையில் உள்ள முதியோர் ஓய்வூதிய விண்ணப்பங்களின் விவரங்கள், இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்ட விவரங்கள் ஆகியவை குறித்து வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்களின் விவரங்களை கேட்டறிந்து, அலுவலக வருகைப் பதிவேட்டையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து வட்டாச்சியார் அலுவலகம், அரசின் திட்டப்பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து விவசாய சங்க பிரதிநிதிகள், உற்பத்தியாளர்கள், மகளிர் சுய உதவி குழுக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். 

அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலிடம், பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா, வாரிசு சான்றிதழ், ரேஷன் கார்டு, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் போன்றவை போன்றவை வழங்கிட வேண்டி கோரிக்கை மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், மனுக்களுக்கு உரிய முறையில் விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெற்றுவரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது மாணவ, மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்கான பயிற்சிகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் இச்சிறப்பான திட்டத்தை வழங்கிய முதல்வருக்கு மாணவ, மாணவியர் நன்றி தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 92.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம், கோரிமேட்டில், முத்தமிழறிஞர் கலைஞர் பணியாற்றிய பழம்பெருமை வாய்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ் படப்பிடிப்பு நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்டு வரும் நுழைவு வாயிலில் செல்பி எடுத்துக் கொண்டார்.

click me!