பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதால் விசாரணை அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்
முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோக்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, 2024 மக்களவைத் தொகுதியில் மீண்டும் ஹாசன் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவரது பாலியல் லீலைகள் அடங்கிய 2976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் துன்புறுத்தல்களில் அரசு அதிகாரிகள் முதல் சாமானியர்கள் வரை பல்வேறு பெண்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா ஆகியோர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்துள்ளார். அதன்பேரில், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்ணின் கண்ணியத்தை மீறுதல் தொடர்பான குற்றங்களுக்காக ஐபிசி 354A, 354D, 506, மற்றும் 509 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அம்மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறி விட்டார். அவரை நாடு கடத்தி உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம், அவரை கட்சியில் இருந்து நீக்கி மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பாதிக்கப்பட்ட சில பெண்களை அடையாளம் கண்டறிந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் வாக்குமூலம் அளிக்க முன்வரவில்லை எனவும், கட்டாயப்படுத்தி விசாரணைக்கு அழைத்தால் தற்கொலை செய்து கொள்வோம் என அப்பெண்கள் மிரட்டல் விடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புகார் அளித்தவர்களிடம் விசாரியுங்கள் எனவும், தாங்கள் யாரும் பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் அளிக்காதபோது தங்களிடம் ஏன் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விசாரணை அதிகாரிகள் செய்வதறியாது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிகிறது.
Diplomatic Passport டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் என்றால் என்ன? பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மன் பறந்தது எப்படி?
அதேசமயம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர் அளித்துள்ள புகாரின் பேரிலேயே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்பெண்ணிடம், சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஆபாச வீடியோக்கள் தொடர்பாக முதன்முறையாக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நான் பெங்களூருவில் இல்லாததால் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. இந்த தகவலை எனது வழக்கறிஞர் மூலம் சி.ஐ.டி.க்கு தெரிவித்துள்ளேன். விரைவில் உண்மை வெல்லும்.” என பதிவிட்டுள்ளார். மேலும், குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக அவர் 7 நாட்கள் அவகாசம் கோரியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.