அருந்ததி முதல் மஞ்சும்மல் பாய்ஸ் வரை... தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய அக்கட தேசத்து படங்கள் இதோ

First Published Mar 7, 2024, 12:48 PM IST

தமிழ் நாட்டு மக்கள் நல்ல படங்களை எப்போதுமே கொண்டாடத் தவறியதில்லை, அந்த வகையில் கோலிவுட்டில் கொண்டாடப்பட்ட பிறமொழி படங்கள் பற்றி பார்க்கலாம்.

Sensational Hit Other Language Movies in Tamilnadu

சினிமாவுக்கு மொழி ஒரு தடையல்ல என்பதை தமிழ் மக்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என எந்த மொழியாக இருந்தாலும் சிறந்த படமாக இருந்தால் அதற்கு தமிழ்நாட்டில் நிச்சயம் வரவேற்பு உறுதி என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர் தமிழ் மக்கள். அதற்கான லேட்டஸ்ட் உதாரணம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படத்திற்கு முன்னர் தமிழ் சினிமா கொண்டாடிய பிற மொழி படங்கள் பற்றி பார்க்கலாம்.

அருந்ததி (Arundhati)

அனுஷ்காவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது அருந்ததி தான். இப்படத்தில் தன்னுடைய ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி அசர வைத்திருந்தார் அனுஷ்கா. இப்படத்தின் திகில் காட்சிகள் இன்றைக்கு பார்த்தாலும் பயப்பட வைக்கும் அளவுக்கு இருக்கும். அதனால் இப்படம் தெலுங்கை போல் தமிழிலும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

நான் ஈ (Naan EE)

ராஜமவுலி இயக்கிய மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்று தான் நான் ஈ. ஒரு ஈ-யை வைத்து இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என்று கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு படைப்பாகவே இது அமைந்திருந்தது. ஈ-யை வைத்து ஆக்‌ஷன் காட்சிகள், ஈ-யை வைத்து பழிவாங்குவது என இப்படமே ஒரு ஆச்சர்யம் தான். அதனால் இப்படம் கோலிவுட்டிலும் கொண்டாடப்பட்டது.

பிரேமம் (Premam)

தமிழ்நாட்டு ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட மலையாள படம் என்றால் அது பிரேமம் தான். மூன்று பருவ காதலை மிகவும் அழகாகவும், யதார்த்தமாகவும் காட்சிப்படுத்தி அதில் வெற்றியும் கண்டார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். மேலும் இப்படத்தில் ஆங்காங்கே தமிழ்நாட்டு கனெக்‌ஷனும் இருந்ததால் இங்கு மட்டும் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது பிரேமம்.

பாகுபலி (Baahubali)

பான் இந்தியா படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் என்றால் அது பாகுபலி தான். அப்படத்தின் வெற்றி தான் இன்று பான் இந்தியா படங்கள் அதிகளவில் வெளிவர காரணமாக அமைந்துள்ளது. வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தை இதைவிட சிறப்பாக எடுத்துவிட முடியாது என சொல்லும் அளவுக்கு பிரம்மிக்க வைக்கும் காட்சிகளுடன் படமாக்கி பிரம்மாண்ட வெற்றியையும் ருசித்தார் ராஜமவுலி. தமிழ்நாட்டில் இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏகே - பின்னணி என்ன?

கேஜிஎப் (KGF)

கோலிவுட் கொண்டாடிய மற்றுமொரு பான் இந்தியா படம் தான் கேஜிஎப். இப்படம் கன்னட சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இப்படத்திற்கு பின்னர் தான் கன்னட படங்களுக்கு மவுசு அதிகரிக்க தொடங்கியது. இதன் பஞ்ச் டயலாக்குகளும், இசையும் அப்படத்தை அசைக்க முடியாத உயரத்துக்கு கொண்டு சென்றது. தமிழக பாக்ஸ் ஆபிஸில் கேஜிஎப் அடித்த செஞ்சுரியை யாராலும் மறக்க முடியாது.

காந்தாரா (Kantara)

கன்னட சினிமா தந்த மற்றுமொரு மாஸ்டர் பீஸ் படம் தான் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்த இப்படம் மண்சாந்த மத நம்பிக்கைகளை ஆழமாக பேசி இருந்தது. பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீஸ் ஆகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய காந்தாரா தமிழ்நாட்டிலும் வசூல் வேட்டை நடத்திச் சென்றது.

மஞ்சும்மல் பாய்ஸ் (Manjummel boys)

தமிழ் சினிமாவில் லேட்டஸ்டாக கொண்டாடப்பட்டு வரும் பிறமொழி படம் என்றால் அது மஞ்சும்மல் பாய்ஸ் தான். குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் கமல்ஹாசனின் குணா பட கனெக்‌ஷனும் உள்ளதால், இதனை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறது தமிழ் சினிமா. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.20 கோடிக்கு மேல் வசூலை அள்ளி மாஸ் காட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்...  மஞ்சும்மல் பாய்ஸை ஓரம்கட்டுமா பா.இரஞ்சித் படம்? இந்தவார தியேட்டர் மற்றும் OTT ரிலீஸ் படங்களின் முழு லிஸ்ட் இதோ

click me!