
தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபியான ரமேஷ் குடவாலாவின் மகனான விஷ்ணு விஷால், சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவரது உடன் பிறந்த சகோதரரான ருத்ரா, ஓஹோ எந்தன் பேபி என்கிற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படம் வருகிற ஜூலை 11ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளரான விஷ்ணு விஷால், புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகள் அளித்து வருகிறார். அதில் பரத்வாஜ் ரங்கனுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது ஏன் என்பது பற்றி பேசி உள்ளார் விஷ்ணு விஷால்.
நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கடந்த 2010-ம் ஆண்டு ரஜினி என்பவருடன் திருமணம் நடந்தது. இருவரும் நான்கு ஆண்டுகள் காதலித்து தான் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு ஆர்யன் என்கிற ஆண் குழந்தையும் உள்ளது. சுமார் 8 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இணைந்து வாழ்ந்த இந்த ஜோடி கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். ரஜினி உடனான விவாகரத்துக்கு பின்னர் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா மீது காதல் வயப்பட்ட விஷ்ணு விஷால் அவரை கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அண்மையில் பெண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு பாலிவுட் நடிகர் அமீர்கான் தான் மிரா என பெயர் சூட்டினார்.
விஷ்ணு விஷாலின் முதல் மனைவி ரஜினிக்கு கேன்சர் பாதிப்பு இருப்பது அவர்களுக்கு திருமணம் ஆவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தான் தெரியவந்ததாம். என்ன நடந்தாலும் கடைசி வரை அவளை பார்த்துக் கொள்வேன் எனக் கூறி திருமணம் செய்துகொண்டாராம் விஷ்ணு விஷால். திருமணமான பின்னர் ஆறு ஆண்டுகள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என இருவரும் முடிவெடுத்திருந்தார்களாம். அந்த ஆறு ஆண்டுகளில் 6 மாதத்திற்கு ஒருமுறை கேன்சருக்கு சிகிச்சை எடுத்து வந்தாராம் ரஜினி. அந்த கட்டத்தில் சினிமாவில் சற்று அதிக கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார் விஷ்ணு விஷால். முழுக்க முழுக்க சினிமா என இருந்ததால், அவருக்கு தன் மீது அக்கறை இல்லை என நினைத்திருக்கிறார் ரஜினி. இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பும் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்ய முடிவெடுத்த ரஜினியிடம்; இப்போது வேண்டாம் என எவ்வளவோ சொல்லி பார்த்தாராம் விஷ்ணு விஷால். ஆனால் ராட்சசன் படம் ரிலீஸ் ஆன ஐந்தாவது நாள் இருவரும் விவாகரத்து பெற்றார்களாம். ஊரே ராட்சசன் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தபோது தனக்கு விவாகரத்து ஆனதாக கண்கலங்க கூறி இருக்கிறார் விஷ்ணு விஷால். தான் அவருக்கு முதலில் செய்து கொடுத்த சத்தியத்திற்காக இன்று வரை அவருடன் பழகிக் கொண்டு தான் இருக்கிறேன் எனவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
முதல் திருமணம் இப்படி விவாகரத்தில் முடிந்ததை அடுத்து ஜுவாலா கட்டா உடன் காதல் வயப்பட்ட போது திருமணம் வேண்டாம் என்று தான் இருந்தாராம் விஷ்ணு விஷால். ஆனால் ஜுவாலா கட்டாவுக்கு திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அதனால் தான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்களாம். ஆனால் திருமணமாகி கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைக்கு இருவரும் முயற்சித்து வந்திருக்கிறார்கள். அதற்காக சிகிச்சையும் எடுத்தார்களாம். பின்னர் அமீர்கானிடம் இந்த விஷயம் பற்றி கூறி இருக்கிறார் விஷ்ணு விஷால். உடனே அவரை மும்பைக்கு அழைத்து வர சொன்ன அமீர் கான், அங்கு உள்ள ஸ்பெஷலிஸ்ட் ஒருவரிடம் ஜுவாலாவுக்கு சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்தது மட்டுமின்றி அவரை தன் வீட்டில் தன் குடும்பத்தில் ஒருவராக பார்த்துக் கொண்டாராம். அதனால் தான் குழந்தை பிறந்த பின்னர் அவரை பெயர்சூட்ட அழைத்து வந்ததாக விஷ்ணு விஷால் கூறினார்.