இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் 95வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு திரைப்படத்தில் வாழ்வியலும், வலிகளும் பேசப்படுகிறது என்றால் அது இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் படமாக தான் இருக்கும். சினிமாவுக்கு வரும் முன்னர் நாடகத் துறையில் கோலோச்சி இருந்தார் பாலச்சந்தர். அங்கிருந்து வந்ததால் இவர் கதை எழுதுவதில் கில்லாடியாக இருந்தார். அழுத்தமான கதைகளை ஆழமான திரைக்கதையாக உருவாக்கும் திறன் கொண்டவர் கே பாலச்சந்தர். இவர் தன் கற்பனையில் உருவாகும் கதை மாந்தர்களை எல்லாம் கதாபாத்திரங்களாக்கி திரைக்காட்சிகளில் உலவ விட்டார். சினிமாவின் பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டமான 1965-ல் இயக்குனராக அறிமுகமானார் பாலச்சந்தர்.
25
பல நட்சத்திரங்களை உருவாக்கிய பாலச்சந்தர்
தமிழ் சினிமாவில் அவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் நீர்க்குமிழி. காமெடியனாக அறிமுகமாகி, குணச்சித்திர நடிகராக பல்வேறு படத்தில் நடித்து வந்த நாகேஷை ஹீரோவாக்கி அழகுபார்த்த முதல் இயக்குனர் பாலச்சந்தர் தான். நட்சத்திர நாயகர்களை மட்டுமே கொண்டு ஹிட் கொடுக்கும் படைப்பாளி அல்ல பாலச்சந்தர், அதற்கு மாறாக பல நட்சத்திரங்களை சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைப்பார். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் ஏராளம்.
35
பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமான பிரபலங்கள்
ரஜினி எனும் மாஸ் நடிகரும், கமல் எனும் கிளாஸ் நடிகரும் அறிமுகமானது பாலச்சந்தர் இயக்கத்தில் தான். இவர்கள் மட்டுமின்றி அவள் ஒரு தொடர்கதை படத்தில் சுஜாதா, நிழல் நிஜமாகிறது படத்தில் சரத்பாபு, ஷோபா, டூயட் படத்தில் பிரகாஷ் ராஜ், வறுமையின் நிறம் சிவப்பில் எஸ்.வி.சேகர், இதுமட்டுமின்றி ராதா ரவி, சின்னக் கலைவாணர் விவேக், விஜயகுமார், டெல்லி கணேஷ், சரிதா என திரையுலகில் கோலோச்சிய பல நடிகர், நடிகைகளை சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர். அவர் தன்னுடைய திரையுலக பயணத்தில் மொத்தம் 48 பேரை அறிமுகப்படுத்தி இருக்கிறாராம்.
முதல் பார்வையிலேயே, முதல் சந்திப்பிலேயே ஒருவரின் முழு திறமையை கணிக்கும் திறன் கொண்டவர் தான் பாலச்சந்தர். இன்று இசைப்புயலாக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமானை தான் தயாரித்த ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியதும் பாலச்சந்தர் தான். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பாலச்சந்தர் திரைத்துறையில் தொடாத ஜானர்களே இல்லை. காமெடி, காதல் சீரியஸ் ஜானர் என உணர்வுகள் வழியே உரையாடியவர். வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களை கட்டமைப்பதில் கில்லாடியாக திகழ்ந்து வந்தார் பாலச்சந்தர்.
55
கே பாலச்சந்தர் பிறந்தநாள்
இயக்குனராக இருந்து சின்னத்திரையில் தடம்பதித்த பாலச்சந்தர், தயாரிப்பாளராகவும் பல்வேறு புதுமைகளை செய்திருக்கிறார். தாதா சாகேப் பால்கே விருது, 7 தேசிய விருது என பல உயரிய அங்கீகாரத்தை பெற்ற பாலச்சந்தர் தமிழ் சினிமாவின் தனித்துவ கலைஞர். அவர் மறைந்தாலும் அவரின் படைப்புகள் காலம் கடந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இப்படி தமிழ் சினிமாவில் பல மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்த பாலச்சந்தரின் 95வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை வாழ்த்தி சமூக வலைதளங்களிலும் ஏராளமானோர் பதிவிட்டு வருகிறார்கள்.