
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தற்போது பிசியாக நடித்து வந்தாலும் இவர் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான கங்குவாவும் சரி, இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ரெட்ரோவும் சரி பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் நடிகர் சூர்யா தரமான கம்பேக் எப்போது கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சூர்யா, டிராப் பண்ணிய படங்களும் சில உள்ளன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் சூர்யாவை தரமான நடிகராக உயர்த்தியவர்களில் முக்கியமானவர் பாலா. அவர் இயக்கத்தில் இதற்கு முன்னர் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்த சூர்யா, கடந்த 2022-ம் ஆண்டு அவருடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்த படம் வணங்கான். இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் ஒரு மாதம் நடைபெற்றது. அதன்பின்னர் இப்படத்தை கைவிடுவதாக அறிவித்தனர். சூர்யாவுக்கும் பாலாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் அப்படம் டிராப் ஆனதாக கூறப்பட்டது.
ஆனால் அதெல்லாம் வெறும் வதந்தி என மறுத்த பாலா, சூர்யாவை வைத்து கன்னியாகுமரியில் ஷூட்டிங் நடத்துவது கடினமாக இருந்ததாகவும் அதனால் இருவரும் பேசி அப்படத்தை டிராப் பண்ணியதாக கூறினார். அதன்பின் அப்படத்தில் அருண்விஜய் நடித்தார். இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன வணங்கான் திரைப்படம் பிளாப் ஆனது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்கிற வெற்றிப் படத்தை கொடுத்த சூர்யா, அதன்பின் அவருடன் இணைய இருந்த படம் தான் புறநானூறு. இப்படம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மொழிப் போர் தியாகியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட இருந்தது. இப்படத்தை சூர்யாவே தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டு, அவருடன் துல்கர் சல்மான், நஸ்ரியா ஆகியோர் நடிக்க கமிட்டாகி இருந்தனர்.
ஆனால் அப்படத்தின் கதை சற்று வில்லங்கமானது என்பதால் அதில் இருந்து விலகினார் சூர்யா. அவர் விலகியதை அடுத்து அப்படத்தை பராசக்தி என்கிற பெயரில் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வருகிறார் சுதா கொங்கரா. இப்படத்தில் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக இருந்து அண்மையில் கைவிடப்பட்ட மற்றொரு திரைப்படம் வாடிவாசல். இப்படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தார். செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற நாவலை மையமாக வைத்து தான் இப்படம் உருவாக இருந்தது. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பதாக இருந்தது. ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வந்தார்.
இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்து 5 ஆண்டுகள் ஆனபோதிலும் அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருந்ததால் படத்தை கைவிட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வாடிவாசல் டிராப் ஆனதால் தற்போது சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.
நடிகர் சூர்யா கைவிட்ட மற்றொரு திரைப்படம் தான் இரும்புக்கை மாயாவி. மாநாகரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் சூர்யாவும் லோகேஷ் கனகராஜும் இணைந்து பணியாற்ற இருந்த படம் இரும்புக்கை மாயாவி. இது ஒரு பேண்டஸி திரைப்படமாக உருவாக இருந்தது. அந்த சமயத்தில் பட்ஜெட் அதிகரித்ததால் இப்படத்தை கிடப்பில் போட்டனர்.
தற்போது அப்படத்தை அமீர்கானை வைத்து இயக்க உள்ளாராம் லோகேஷ் கனகராஜ். இதை அமீர்கானே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். தான் லோகேஷ் இயக்க உள்ள ஃபேண்டஸி படத்தில் நடிக்க உள்ளதாக ஹிண்ட் கொடுத்திருந்தார் அமீர்கான். அது இரும்புக் கை மாயாவியாக இருக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.