காதல் படங்களை தனக்கே உரிய பாணியில் இயக்கி, அதனை வெற்றி பெற வைப்பவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடிய அலைபாயுதே திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த, நடிகர் - நடிகை பற்றிய தகவலை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
26
'அலைபாயுதே' திரைப்படம்:
தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் படங்கள் வெளியாகி இருந்தாலும், ஒரு சில திரைப்படங்கள் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை எத்தனை காலமானாலும் மறக்க முடியாது. அந்த வகையில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 2000-ஆம் ஆண்டு, காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான 'அலைபாயுதே' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும் படமாக தற்போது வரை உள்ளது.
இந்த படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசை இப்படத்திற்கு உயிர் நாடி போல் இருந்தது என கூறலாம். அதே போல் பிசி ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் இப்படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது.
இந்த படத்தில் நடிகர் மாதவன் ஹீரோவாக நடிக்க, ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஜெயசுதா, சொர்ண மால்யா, விவேக், பிரமிட் நடராஜன், வேணு அரவிந்த், சுகுமாரி, அரவிந்த்சாமி, குஷ்பூ, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கிராமத்தில் நடைபெறும் தன்னுடைய நண்பரின் திருமணத்திற்காக செல்லும் நாயகன் கார்த்திக், கதாநாயகி சக்தியை சந்திக்க நேர்கிறது. இருவரும் ரயிலில் பயணிக்கும் போது ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது. பின்னர் காதலிக்க துவங்குகின்றனர். பல தடைகளை தாண்டி, இருவரும் வீட்டுக்கே தெரியாமல் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வாழும் நிலையில், இந்த தகவல் வெளியே வர வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
கார்த்திக் மீதான பொஸசிவ் சக்தி பல தருணங்களில் வெளிப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் சக்திக்கு விபத்து ஏற்பட, மீண்டும் இருவரும் எப்படி ஒன்று சேர்கிறாரார்கள் என்பது உணர்ச்சி போராட்டத்துடன் காட்சி படுத்தி இருப்பர் இயக்குனர் மணிரத்னம். இப்படம் வெளியாகி சுமார் 25 வருடங்கள் ஆகும் நிலையில், இந்த படத்தில் ஹீரோ - ஹீரோயினாக நடிக்க இருந்த நடிகர் பற்றி மணிரத்னம் கூறியுள்ளார்.
66
ஷாருக்கான் - கஜோல் நடிக்க வேண்டியது:
அலைபாயுதே படத்தின் கதையை முதலில் ஷாருக்கான் மற்றும் கஜோலை வைத்து இயக்கவே திட்டமிட்டு இருந்ததாகவும், இந்த கதை ஷாருக்கானுக்கு மிகவும் பிடித்திருந்தாலும், இந்த படத்தின் கிளைமேக்ஸ் எப்படி வரவேண்டும் என்பதை, நான் அப்போது உருவாக்கவில்லை. எனவே அலைபாயுதே திரைப்படத்தை எடுக்காமல் கஜோல் மற்றும் ஷாருக்கான் வைத்து 'தில் சே' படத்தை இயக்கினேன். இதன் பின்னரே அலைபாயுதே திரைப்படம் ஷாலினி மற்றும் மாதவனை வைத்து படமாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.