சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து, தன்னுடைய மகள் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்' படத்தில் நடித்து வருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில், ரஜினிகாந்த் மொய்தீன் கான் என்கிற சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் விஷ்ணு விஷால் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 'லால் சலாம்' மற்றும் '170 ஆவது' படங்களை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்திற்கே, 110 கோடி சம்பளமாக பெற்ற நிலையில்... 'லால் சலாம்' மற்றும் 170-ஆவது படத்திற்கு சேர்த்து, 105 கோடி தான் சம்பளமாக பெற உள்ளதாக கூறப்படுகிறது. 'லால் சலாம்' படத்திற்கு 25 கோடியும், ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு 80 கோடியும் சம்பளமாக பெற உள்ளாராம் தகவல் வெளியாகியுள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் தலைவர் நடிக்க உள்ள 170 வது படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகளுக்கு முன்னதான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடித்து துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.