ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கடந்த 1965-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி பிறந்தவர் மயில்சாமி. நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிறுவயதில் இருந்தே மேடை நாடகங்களின் நடித்து வந்த மயில்சாமிக்கு கடந்த 1985-ம் ஆண்டு தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் மயில்சாமி தமிழில் முதன்முதலில் நடித்த திரைப்படம் கன்னிராசி. பிரபு மற்றும் ரேவதி ஹீரோ, ஹீரோயினாக நடித்திருந்த இப்படத்தில் டெலிவரி பாயாக ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார் மயில்சாமி.
இதையடுத்து கமலுடன் அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா போன்ற படங்களிலும் ரஜினிகாந்துடன் பணக்காரன், உழைப்பாளி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள மயில்சாமி, விவேக், வடிவேலு போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய பின்னர் தான் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இவர்களுடன் மயில்சாமி இணைந்து நடித்த தூள், 12பி, வசீகரா, கிரி, ரெண்டு, திமிரு, மலைக்கோட்டை போன்ற படங்களின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
தனுஷின் பொல்லாதவன் படத்தில் குடிகாரனாக நடித்து இவர் செய்யும் அலப்பறைகளை ரசிக்காத ஆள் இருக்க முடியாது. அதேபோல் சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் போலீஸாக நடித்து காமெடியில் கலக்கி இருப்பார் மயில். தூள் படத்தில் நடிகர் விவேக்கை ஏமாற்றி திருப்பதியில் லட்டுக்கு பதிலாக ஜிலேபி கொடுக்கப்படுவதாக மயில்சாமி செய்த காமெடி அலப்பறை ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தன.
இதையும் படியுங்கள்... Actor Mayilsamy passess away : பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமானார்
நடிகர் மயில்சாமி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் உடன்பால். கடந்தாண்டு இப்படம் நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆனது. இவர் நடித்து கடைசியாக திரையரங்கில் ரிலீசான படம் தி லெஜண்ட். சரவணன் அருள் நாயகனாக நடித்திருந்த அப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார் மயில்சாமி. இவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு ரிலீஸ் ஆன கண்களால் கைது செய் திரைப்படத்துக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
நடிகர் மயில்சாமி அசத்தப்போவது யாரு என்கிற சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். தமிழில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மயில்சாமி, செல்வா, நியூ, உள்ளம் கொள்ளை போகுதே போன்ற சில படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். மயில்சாமியின் மகன் அன்புவும் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இப்படி சினிமாவில் புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞனாக வலம் வந்த மயில்சாமி இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளது தமிழ் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 57 வயதில் மரணமடைந்துள்ள மயில்சாமிக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... யார் இந்த மயில்சாமி..? நடிகராக மட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டது ஏன்.?