
கில்லர் சூப் என்பது 2024 ஆம் ஆண்டு ஹிந்தி மொழியில் வெளியான ஒரு கிரைம் திரில்லர் வெப் சீரிஸ் ஆகும். இந்த தொடரை நெட்ஃபிளிக்ஸ்-ல் தமிழ் மொழியிலும் காண முடியும். அபிஷேக் சௌபே எழுதி இயக்கிய இந்த தொடருக்கு, ஹர்ஷத் மேத்தா, உஜ்வல் மிஸ்ரா, பாலாஜி மோகன் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர்.
ஸ்வாதி ஷெட்டி என்கிற ஒரு சமையல்காரப் பெண்ணைச் சுற்றி இந்த கதை நடக்கிறது. ஸ்வாதிக்கு சமையல் கலைஞராகி ரெஸ்டாரண்ட் துவங்க வேண்டும் என்கிற லட்சியம் இருக்கிறது. அதே சமயம் அவருக்கு பிரபாகர் ஷெட்டியுடன் திருமணமாகி மகன் இருக்கும் நிலையில் உமேஷ் என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வருகிறது. உமேஷ் பார்ப்பதற்கு ஸ்வாதியின் கணவர் பிரபாகரைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்டவர். இந்த நிலையில் உமேஷும், ஸ்வாதியும் ஒரு நாள் காதலில் கலந்திருந்த போது பிரபாகரிடம் சிக்கிக் கொள்கின்றனர். அப்போது நடக்கும் தாக்குதலில் பிரபாகர் கொல்லப்படுகிறார். பிரபாகர கொலை செய்யப்பட்டது வெளியில் தெரியாமல் இருப்பதற்காக அவரைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட உமேஷை ஸ்வாதி ஆள்மாறாட்டம் செய்ய வைக்கிறார். அதன் பின் என்ன நடந்தது? ஸ்வாதி மாட்டிக்கொண்டாரா? என்பதுதான் இந்த தொடரின் மீதிக் கதை.
2020 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒரு திரில்லர் வெப் சீரிஸ் ‘லாக்டு’. பிரதீப் தேஜா இயக்கத்திங் பிரசாந்த் சர்மா தயாரிப்பில், ஆஹா ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியானது.
இந்தக் கதை ஒரு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஆனந்த் சக்கரவர்த்தி என்பவரை சுற்றி நகர்கிறது. அவரது வீட்டில் ஒரு நாள் இரவு இரண்டு திருடர்கள் நுழைகின்றனர். வீட்டிற்கு வரும் ஆனந்த், திருடர்கள் இருப்பதை அறிந்து கொள்கிறார். அவர் வீடு ஒரு உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்புடன் கூடிய ஸ்மார்ட் ஹவுஸ் ஆகும். அந்த அமைப்பை பயன்படுத்தி வீட்டை முழுவதுமாக லாக் செய்து விடுகிறார். இதனால் திருடர்கள் வெளியேற முடியாமல் வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொள்கின்றனர். அதன் பின் என்ன நடந்தது? திருடர்கள் வெளியேறினார்களா? ஆனந்த் திருடர்களிடம் சிக்கிக்கொண்டாரா? என்பது குறித்த விறுவிறுப்பான கதை தான் லாக்டு வெப் தொடரின் கதை.
‘கேரளா ஃபைல்ஸ்’ மலையாளத்தில் வெளியான ஒரு பிரபலமான கிரைம் தில்லர் வெப் சீரிஸ் ஆகும். இதன் முதல் சீசன் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் வெளியாகி உள்ளது. இந்த தொடரை டிஸ்னி ஹாஸ்டாரில் தமிழ் மொழியில் காணலாம்.
இந்த தொடரின் முதல் சீசனில், கொச்சியில் உள்ள ஒரு லாட்ஜில் பாலியல் தொழிலாளி ஒருவர் சடலமாக கிடக்கிறார். அங்கு கிடைத்த ஒரே ஒரு துப்பை வைத்துக்கொண்டு குற்றவாளியை பிடிக்க போலீஸ் எவ்வாறு போராடுகிறது என்பதே இந்த சீரிஸின் மையக்கரு. அடுத்து என்ன நடக்கப்போகிறது? குற்றவாளியை போலீசார் எப்படி நெருங்கினார்கள்? குற்றவாளியை எங்கிருந்து தேடுவது? துப்புகளே கிடைக்காத நிலையில் ஒரு சிறிய ஆதாரத்தை எப்படி உருவாக்குவது என்று மிக எதார்த்தமாக இந்த தொடர் காட்சிப்படுத்தி இருந்தது. இதன் இரண்டாவது சீசனில் போலீசார் புதிய வழக்கு ஒன்றை கையாளுகின்றனர். திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் ஒருவர் காணாமல் போகிறார். இந்த வழக்கை போலீசார் விசாரிக்க தொடங்குகின்றனர். அதன் பின்னர் என்ன நடந்தது? என்பது தான் ‘கேரளா ஃபைல்ஸ்’ சீசன் 2 வின் மையக்கரு.
கோஹ்ரா என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி மொழி கிரைம் திரில்லர் வெப் சீரிஸ் ஆகும். இந்த திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழில் காண முடியும்.
வயல்வெளியில் ஒரு வெளிநாடு வாழ் இந்திய இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவருடன் வந்த வெள்ளைக்கார நண்பர் காணாமல் போகிறார். அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடக்கும் அந்த இளைஞன் யார்? கொலைக்கு காரணம் என்ன? இந்த கொலையை செய்தது யார்? அவருடன் இருந்த வெள்ளைக்காரர் என்ன ஆனார்? என்பது குறித்த கேள்விகளுடன் விறுவிறுப்பாக நகர்கிறது இந்த வெப் சீரிஸ்.
2021 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான கிரைம் திரில்லர் மற்றும் சூப்பர் நேச்சுரல் திரில்லர் வெப் சீரிஸ் தான் அரண்யாக். இமயமலையின் அடர்ந்த மூடுபனி நிறைந்த காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள சிர்னோ என்கிற கற்பனை நகரத்தில் இந்த கதை நடக்கிறது.
இந்த மலைப்பகுதியில் அடிக்கடி மர்மமான மரணங்கள் நடக்கிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி ஒருவர் இந்த மலைப்பகுதியில் காணாமல் போகிறார். அவரின் சடலம் பழமையான மரம் ஒன்றின் அருகே கண்டெடுக்கப்படுகிறது. உள்ளூர் புராணங்களில் குறிப்பிடப்படும் காட்டு மிருகமான நர்பக்ஷி (மனிதனை உண்ணும் மிருகம்) இந்த கொலைகளை செய்வதாக மக்கள் பயந்து நடுங்குகின்றனர். போலீசாரின் விசாரணையில் இந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் சதித்தட்டங்கள், பழமையான மூடநம்பிக்கைகள் என அடுக்கடுக்கான உண்மைகள் வெளிவருகின்றன. அடுத்தடுத்த திருப்பங்களுடன் ஒவ்வொரு எபிசோடும் பார்வையாளர்களை கதைக்குள் ஈர்த்துச் செல்லுகிறது. கிரைம் திரில்லர், அமானுஷ்ய தன்மை கொண்ட கதைகளை விரும்புவராக இருந்தால் அரண்யாக் சிறந்த தேர்வாக இருக்கும். இதை நீங்கள் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
2022 ஆம் ஆண்டு ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் வெளியான தமிழ் மொழி கிரைம் திரில்லர் வெப் சீரிஸ் தான் ‘இரை’. இந்த சீரிஸ் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்டீரம் ஆகிறது. இந்தப் படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதன் கதைக்களம் தொடர்ச்சியாக காணாமல் போனவர்களின் வழக்குகளை மையமாகக் கொண்டது. பணக்கார தொழிலதிபராக இருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது மகள் காணாமல் போனதால் ஆழ்ந்த மன உளைச்சலில் இருக்கிறார். இதன் பின்னணியில் கொடூரமான மனித வேட்டை நடப்பதை உணர்ந்து கொள்கிறார். அவரே முன்னின்று வழக்குகளை விசாரித்து காணாமல் போனவர்களில் ரகசியங்களை வெளிக்கொணர முயற்சிக்கிறார். இந்த விசாரணையில் அவருக்கு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன. பின்னர் என்ன நடந்தது? அவர் தன் மகளை கண்டுபிடித்தாரா? காணாமல் போன ஒவ்வொரு நபரும் எங்கு சென்றார்கள்? அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதுதான் இந்த கதையின் மையக்கரு.