
சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து இன்று இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். தற்போது 72 வயதிலும் பிசியான ஹீரோவாக வலம் வரும் ரஜினிகாந்த், சினிமாவிற்குள் நுழைய முக்கிய காரணம் அவரின் நண்பர் ராஜ் பகதூர் தான். இருவரும் கர்நாடகாவில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். அப்போது ரஜினியின் ஸ்டைலையும், தோற்றத்தையும் பார்த்து வியந்துபோன அவரை சினிமாவில் முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தினார். அவர் கொடுத்த ஊக்கம் தான் ரஜினி சினிமாவுக்குள் நுழைய முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ரஜினி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் அவரின் நண்பர் ராஜ் பகதூர். அவர் கூறியதாவது : “1970ல் ரஜினி கண்டக்டராக வேலைக்கு சேர்ந்தான். நான் டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன். முதல்முதலில் அன்றைக்கு தான் நாங்கள் சந்தித்தோம். ஒரே பஸ்ஸில் எங்கள் இருவரையும் டிரைவர், கண்டக்டராக வேலைக்கு போட்டாங்க. அன்றைக்கு இருந்த நட்பு, 53 வருடங்களாக தொடர்கிறது. அப்போ எப்படி போடா... வாடானு பேசுவமோ, இப்பையும் அப்படி தான் பேசுவோம். உடல் மட்டும் தான் வெவ்வேறு, ஆனால் உயிர் ஒன்று தான் என சொல்லும் அளவுக்கு நாங்கள் இருவரும் உயிர் நண்பர்கள்.
நாங்கள் இருவரும் டிரைவர் கண்டக்டராக இருக்கும்போது அடிக்கடி நாடகம் போடுவோம். அதில் இருவருமே நடிப்போம். அந்த நாடகங்களில் மெயின் கேரக்டரகள் எல்லாம் ரஜினி தான் பண்ணுவான். நான் சின்ன சின்ன கேரக்டர் பண்ணுவேன். அவன் நாடகத்தில் நடிப்பதை பார்த்து நானே வியந்திருக்கிறேன். இவன் ஏன் சினிமாவில் முயற்சி செய்யக்கூடாதுனு அவனுக்கு ஒரு ஊக்கம் கொடுத்தேன். அவனின் நடிப்பை பார்த்து மக்கள் கைதட்டி விசில் அடிப்பார்கள். அவனிடம் சினிமாவில் நடிக்க முயற்சி செய் என சொன்னேன். அதற்கு அவன், எனக்கெல்லாம் யாரு சான்ஸ் கொடுப்பாங்க என சொன்னார்.
உன் திறமை உனக்கு தெரியல, உன் கண்ணுல ஒரு பவர் இருக்கு, அது உன்னை எங்கேயோ கொண்டுபோய் விடும். முயற்சி பண்ணு என சொன்னேன். என்ன பண்ண என கேட்டார். சென்னைக்கு போய் பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் இரண்டு ஆண்டு பயிற்சி எடுத்துக்கோனு சொன்னேன். அப்போது ரஜினியின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால், நான் அங்கு போய்விட்டால், குடும்பத்தை யார் பார்த்துப்பாங்க என கேட்டார். அப்போது நான் கொஞ்சம் வசதியாக இருந்ததால், நான் உன் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன் என சொன்னேன்.
அவன் இரண்டு ஆண்டுகள் படிப்பை முடித்துவிட்டு கன்னட நாடகம் ஒன்றில் நடித்தபோது அந்த சமயத்தில் கே பாலச்சந்தர் அந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது ரஜினியின் நடிப்பை பார்த்து வியந்துபோன பாலச்சந்தர். நாடகம் முடிந்ததும் ரஜினியை அழைத்து, நீ தமிழ் கத்துக்கோ என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அப்போ ரஜினிக்கு தமிழ் முழுசா பேச தெரியாது. பாலச்சந்தர் சொன்ன விஷயத்தை ரஜினி என்னிடம் சொன்னான். உடனே அவனுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக நீயும், நானும் இனி தமிழிலேயே பேசலாம் என்று சொன்னேன்.
அதன்பின்னர் தமிழில் ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தேன். ஒரே மாதத்தில் தமிழை சரளமாக பேச கற்றுக்கொண்டான். இதையடுத்து பாலச்சந்தரிடம் சென்று சான்ஸ் கேட்டான். உடனே அவர் உனக்கு தமிழ் தெரியாதேப்பானு சொன்னதும், நல்லா தமிழ் பேசுவேன் என பேசிக்காட்டி இருக்கிறார். இதைப்பார்த்த பாலச்சந்தர் ஆச்சர்யமடைந்தார். பின்னர் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வைத்தார். அதன்பின்னர் மூன்று முடிச்சு படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார். உனக்கு என்னென்ன ஸ்டைல் எல்லாம் தெரியுமோ செய் என சொல்லிவிட்டார். ரஜினியும் சிகரெட்டை வாயில் தூக்கி போட்டு பிடிப்பது, கண்ணாடியை திருப்பி போடுவது என தன்னிடம் உள்ள அனைத்து ஸ்டைலையும் அப்படத்தில் காட்டி இருந்தார்.
அதன்பின்னர் படங்கள் ரஜினிக்கு குவிந்தன. இப்படி ஒருவனை பார்த்ததே இல்லை என ரசிகர்களும் அவருக்கு அதிகரிக்க ஆரம்பித்தனர். 24 மணிநேரமும் ஷூட்டிங் இருக்கும். அந்த அளவுக்கு பிசியாக இருந்தான். இந்த மாதிரி நடிச்சு நடிச்சு 170படம் முடிச்சுட்டான். பத்மஸ்ரீ, பத்ம விபூஷன், தாதாசாப் பால்கே விருது என எல்லா உயரிய விருதும் வாங்கிவிட்டான். இந்த விருதுகளை எல்லாம் விட தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நல்ல மனிதன் என பெயரெடுத்திருக்கிறான். அதைவிட வேறு என்ன வேண்டும்.
ரஜினி கண்டக்டராக வேலை செய்த நாட்களிலேயே நல்லா ஸ்டைல் பண்ணுவேன். பஸ்சுல எவ்ளோ கூட்டம் இருந்தாலும் சரசரனு டிக்கெட் கொடுப்பான். தலை முடியை சிலிப்பி விட்டுக்கொண்டே இருப்பான். சிக்னலில் பஸ் நின்னா, கீழே இறங்கி ஸ்டைலை நின்னு தம் அடிப்பான். அவன் தலை முடியை கோதி விட்டதால் தான் முடியெல்லாம் போச்சு. இப்போ அவன் சொட்டையானதுக்கு காரணம் இதுதான். ஸ்டைல் பண்ணி பண்ணி தான் முடியே இல்லாம போச்சு. ரோட்ல போகும்போது சிகரெட்டை தூக்கி போட்டு வாய்ல பிடிப்பான். டேய் பாக்குறவங்க பைத்தியம்னு சொல்லுவாங்கனு திட்டுவேன். இல்லமா சும்மா பிராக்டிஸ் பண்றேன்னு சொல்லுவான். அன்று முயற்சி செய்ததால் தான் இன்று அதையெல்லாம் திரையில் அசால்டாக செய்கிறான் என்று ராஜ் பகதூர் கூறி உள்ளார்.