
லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பின்னர் அமீர்கான் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘சிதாரே ஜமீன் பர்’, இப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. 2 ஆண்டு இடைவெளிக்குப் பின் அமீர்கான் நடித்துள்ள படம் என்பதால் இதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இம்முறையும் வித்தியாசமான படத்தைக் கொண்டு வந்துள்ளார் அமீர்கான். ‘சிதாரே ஜமீன் பர்’ திரைப்படம் பார்ப்பவர்களை நெகிழ வைப்பது மட்டுமின்றி, சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும். ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான ‘சிதாரே ஜமீன் பர்’ திரைப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னாஇயக்கி உள்ளார்.
இப்படத்தில் அமீர்கான் உடன் ஜெனிலியா தேஷ்முக் மற்றும் 10 புதுமுக நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை முதலில் நடிக்க இருந்தது அமீர்கான் இல்லை. இப்படத்தை அமீர்கான் தயாரிக்க தான் முடிவெடுத்து இருந்தார். ஒரே நேரத்தில் இந்தி மற்றும் தமிழில் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்த அமீர்கான், தமிழில் சிவகார்த்திகேயனையும், இந்தியில் ஃபர்ஹான் அக்தரையும் நடிக்க வைக்க முடிவு செய்து அவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி இருந்தார். அவர்களும் இப்படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார்களாம்.
அமீர்கான் எந்த ஒரு படத்தை தயாரித்தாலும் அதன் ஷூட்டிங் தொடங்கும் முன் முழு கதையையும் இயக்குனர்களிடம் கேட்பாராம். அந்த வகையில் ‘சிதாரே ஜமீன் பர்’ திரைப்படத்தின் கதையையும் கேட்ட அவர், இதில் ஏன் நாம் நடிக்க கூடாது என யோசித்திருக்கிறார். இந்த கதை அவரை மிகவும் இம்பிரஸ் செய்ததால், சிவகார்த்திகேயன் மற்றும் ஃபர்ஹான் அக்தர் ஆகியோரிடம் பேசியுள்ளார். அவர்களும் தங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை என சொல்லி படத்தில் இருந்து விலகியதை அடுத்து தான் இந்த படத்தில் அமீர்கான் நடித்துள்ளார். இப்படி கடைசி நேரத்தில் தன் கைவசம் வந்த இந்த படத்தின் மூலம் அமீர்கான் கம்பேக் கொடுத்தாரா? சிதாரே ஜமீன் பர் படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த விமர்சனம் மூலம் பார்க்கலாம்.
அமீர்கான் மீண்டும் ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்திருக்கிறார். அவரது ‘சிதாரே ஜமீன் பர்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கூடைப்பந்து பயிற்சியாளர் குல்ஷன் (அமீர் கான்) என்பவரை மையமாகக் கொண்ட கதை இது. திறமையான பயிற்சியாளரான இவர் சில கெட்ட பழக்கங்களால் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். ஒருமுறை குடித்துவிட்டு கார் ஓட்டி அவர் மாட்டிக்கொள்ள பிரச்சினை காவல் நிலையத்தில் தொடங்கி உயர் நீதிமன்றம் வரை செல்கிறது.
நீதிபதி அவரை சமூக சேவையாற்ற உத்தரவிடுகிறார். அதன்படி நரம்பியல் மாறுபாடு உள்ளவர்களுக்கு கூடைப்பந்து பயிற்சி அளிக்க செல்கிறார். குல்ஷன் அவர்களுக்குப் பயிற்சி அளித்தாரா? அவர்களை எப்படி அணுகுகிறார்? என்னென்ன சவால்களையெல்லாம் சந்தித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை
பிரெஞ்சு மொழியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘சாம்பியன்ஸ்’ என்கிற திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘சிதாரே ஜமீன் பர்’. இயக்குநர்கள் ஆர்.எஸ். பிரசன்னா மற்றும் திவ்யா நிதி சர்மா இந்தக் கதையை இந்தியர்களைக் வகையில் தழுவி எடுத்துள்ளனர். கதைக்கு பலம் சேர்க்கும் வகையில், உண்மையிலேயே நரம்பியல் மாறுபாடு உள்ள குழந்தைகளாக டவுன் சின்ட்ரோம் மற்றும் ஆட்டிசம் உள்ளவர்களை நடிக்க வைத்துள்ளார் பிரசன்னா.
அவர்களிடம் நடிப்பு வாங்குவது எளிதல்ல, ஆனால் அவர் கடினமாக உழைத்து அவர்களை அழகாகத் திரையில் காட்டியுள்ளார். அவரது உழைப்புக்கான பலன் திரையில் தெரிகிறது. படத்தின் கதை நம்மை நெகிழ வைக்கிறது. சில காட்சிகள் சிரிப்பை வர வைக்கும், சில காட்சிகள் கண்கலங்க வைக்கும். “சண்டையில் நீ ஜெயிச்சாலும், நான் ஜெயிச்சாலும், தோக்குறது நம்ம உறவுதான்” என படத்தில் இடம்பெறும் ஏராளமான வசனங்கள் நெஞ்சைத் தொடும் வண்ணம் அமைந்துள்ளன.
‘சீதாரே ஜமீன் பர்’ படத்தில் அமீர்கான், குடிப்பழக்கம் கொண்ட விளையாட்டு பயிற்சியாளராக நடித்துள்ளார். கோபமும் எரிச்சலும் அவரது வாழ்க்கையின் ஒரு பகுதி. அமீர்கான் வழக்கம் போல் தனது கதாபாத்திரத்தின் ஆழம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். அவர் தனது கதாபாத்திரத்தை அனைத்து கோணங்களிலும் சிறப்பாகச் செய்துள்ளார். படத்தில் நடித்த நரம்பியல் மாறுபாடு உள்ள கலைஞர்களான அருஷ் தத்தா, கோபி கிருஷ்ண வர்மா, சன்வித் தேசாய், வேதாந்த் சர்மா, ஆயுஷ் பன்சாலி, ஆஷிஷ் பெண்ட்ஸே, ரிஷி ஷானி, ரிஷப் ஜெயின், நமன் மிஸ்ரா மற்றும் சிம்ரன் மங்கேஷ்கர் ஆகியோர் தங்கள் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளனர். ஜெனிலியாவும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். படத்திற்கு ராம்பிரசாத்தின் பின்னணி இசையும், ஷங்கர் எசான் லாயின் பாடல்களும் பக்க பலமாக அமைந்துள்ளன. ஸ்ரீநிவாஸ் ரெட்டியின் ஒளிப்பதிவு கச்சிதம். மொத்தத்தில் சிதாரே ஜமீன் பர் அமீர் கானுக்கு அடித்த ஜாக்பாட் என்றே சொல்லலாம்.