திரையரங்குகளில் ஒரு பிரம்மாண்ட படம் வந்தால் அதனுடன் வரும் சிறு பட்ஜெட் படங்களை பெரும்பாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்த ஒரு நிலை தான் மெட்ராஸ் மேட்னி படத்திற்கும் உள்ளது. இருப்பினும் தக் லைஃப் படம் சொதப்பியதால் அதைக்காட்டிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது மெட்ராஸ் மேட்னி. இப்படத்தை கார்த்திகேயன் மணி இயக்கி உள்ளார். இதில் காளி வெங்கட், ரோஷினி, சத்யராஜ் என ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
மெட்ராஸ் மேட்னி பட கதை
காளி வெங்கட் “கண்ணன்” எனும் கதாபாத்திரத்தில், அவரது குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை எதார்த்தமாகவும் நம்மை பாதிக்கக்கூடிய வகையில் படம் பிடித்து காட்டுகிறார் கார்த்திக்கேயன் மணி. பொதுவாக நம் வாழ்வில் அம்மாவின் துன்பங்களே கண்ணுக்கு அதிகமாக தெரியும். அதனால் தான் பெரும்பாலானவர்கள் தாயின் மீதே அதிக பாசம் உண்டு .
ஆனால், இந்த படம் சொல்லப்படாத தந்தையின் வலியையும், அவர் மனதளவில் தாங்கும் வேதனையையும் பேசுகிறது. அப்பா பெரும்பாலும் தன் வேதனையையோ, போராட்டத்தையோ குழந்தைகளிடம் அதிகம் பகிர்ந்து கொள்ள மாட்டார். நான் சந்தித்த கஷ்டங்களை என் பிள்ளைகள் சந்திக்க கூடாது என்ற எண்ணத்துடன் ஓடுகிற ஒரு ஜீவன், அதைத்தான் இந்த படம் நுணுக்கமாகக் காட்டுகிறது.
34
மெட்ராஸ் மேட்னி விமர்சனம்
காளி வெங்கட் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய நடிகருள் ஒருவர். அவரின் யதார்த்தமான நடிப்பு கண்களில் கண்ணீரை வரவைக்கும். இப்படத்தில் அவர் நடித்துள்ளார் என்று சொல்வதை விட மிடில் கிளாஸ் தந்தையாக வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். எழுத்தாளராக நடித்திருக்கும் சத்யராஜ், ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு ஒட்டுமொத்தப் படத்தையும் நகர்த்திச் சென்றுள்ளார்.
படத்தில் காளி வெங்கட்டின் மகளாக நடித்துள்ள ரோஷினி ஹரிப்ரியன், மகனாக நடித்துள்ள கிஷோர், மனைவியாக நடித்திருக்கும் ஷெல்லி என அனைத்து கதாபாத்திரங்களும் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். கார்த்திகேயன் மணியின் ரைட்டிங் மற்றும் இயல்பான காட்சிகளும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. கே.சி.பாலசாரங்கனின் இசை படத்தோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்களால் கண்டிப்பாக கொண்டாடப்பட வேண்டிய படங்களுள் இந்த மெட்ராஸ் மேட்னியும் ஒன்று.