
38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்' படத்தில் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையான இப்படம் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
தக் லைஃப் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து உள்ளது. இப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இப்படத்தின் முதல் காட்சிகள் அமெரிக்காவில் இன்று அதிகாலையிலேயே திரையிடப்பட்டன. அங்கு படத்தை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவான இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை தற்போது பார்க்கலாம்.
'தக் லைஃப்' படத்தைப் பார்த்த ரசிகர்கள், காட்சி அமைப்புகள் அருமையாக இருப்பதாகக் கூறுகின்றனர். முதல் பாதி வழக்கமான கதையாகத் தோன்றினாலும், மணிரத்னத்தின் இயக்கம் அற்புதம். இடைவேளைக்கு முந்தைய சண்டைக் காட்சி படத்தின் சிறப்பம்சம். சிம்புவின் நடிப்பு அற்புதம். கேங்ஸ்டர்களுக்கு இடையேயான மோதல்தான் கதை. கமலின் நகைச்சுவை வசனங்கள், வித்தியாசமான நடிப்பு ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாதி அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. பழிவாங்கும் கதை பரபரப்பை ஏற்படுத்துகிறது.
கதை முன்னரே யூகிக்கக்கூடியதாக உள்ளது, புதுமை இல்லை என்று பலர் கூறுகின்றனர். திரிஷா, அபிராமி ஆகியோருடனான கமலின் காதல் காட்சிகள் தேவையற்றவை. சில இடங்களில் கவரும் காட்சிகளுடன் படம் சுவாரஸ்யமாக உள்ளது. ஆனால் மணிரத்னம் படத்தை மெதுவாக நகர்த்தியது ஒரு குறை. இரண்டாம் பாதியை உணர்ச்சிபூர்வமாகக் கையாண்டுள்ளார். தொழில்நுட்ப ரீதியாக படம் நன்றாக இருந்தாலும், மற்ற குறைகள் காரணமாக 'தக் லைஃப்' சராசரிப் படமாகவே உள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர்.
தக் லைஃப் திரைப்படம் போர் அடிக்கும் ஒரு கேங்ஸ்டர் டிராமா திரைப்படம். ஆரம்பத்தில் சற்று நன்றாக இருந்தாலும் அதன் பின்னர் சரியில்லை. சில சுவாரஸ்யமான காட்சிகள் காரணமாக முதல் பாதி ஓரளவு பார்க்கக்கூடியதாக உள்ளது. இருப்பினும், இரண்டாம் பாதி ஆரம்பம் முதல் முடிவு வரை சுமார் தான்.
மணிரத்னம் இந்தக் கதையைத் தொடங்கிய விதம் அருமையாக இருந்தது, ஆனால் கதை போகப் போக மெதுவாகவும், மிகவும் கணிக்கக்கூடியதாகவும் உள்ளது. எமோஷனல் காட்சிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை. ஏ.ஆர்.ரகுமானின் இசையில் மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.
கமல்ஹாசன் எதிர்பார்த்தபடி நடிப்பில் தனித்து நிற்கிறார். சிம்பு நன்றாக நடித்திருக்கிறார், திரிஷாவின் கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டுள்ளது மற்றும் பயனற்றதாக உணர்கிறது. முதல் பாதியில் சில சுவாரஸ்யமான காட்சிகள், நல்ல புரொடக்ஷன் வேல்யூ மற்றும் தனித்துவமான ஒளிப்பதிவு. இதைத் தவிர, நினைவில் கொள்ள வேண்டிய வகையில் படத்தில் எதுவும் இல்லை. ஏமாற்றமளிக்கிறது என ஒருவர் பதிவிட்டுள்ளார்.