தீபாவளி கூட்ட நெரிசல் - தி.நகரில் தீவிரமாக கண்காணிக்கும் போலீசார்

First Published Oct 18, 2016, 1:26 AM IST
Highlights


தீபாவளி பண்டிகையை ஒட்டி தி.நகருக்கு பொருட்கள் வாஅங்க வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், போக்குவரத்தை சீர் செய்யவும் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி என்றாலே பட்டாசுகளும், பலகாரங்களும், புத்தாடைகளும் தான் என்பது மக்கள் மனதில் ஆழப்பதிந்தவை. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு புது ஆடைகள் வாங்குவதில் அனைவருக்கும் ஆர்வம் உண்டு. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை 29-ந்தேதி (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஆடைகள், நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விடுமுறை நாளான நேற்று ஜவுளி வாங்குவதற்காக மக்கள் குடும்பம், குடும்பமாக தியாகராயநகரில் திரண்டனர். தங்களுக்கு தேவையான ஆடை-அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

இதனால் தியாகராயநகரில் உள்ள வணிக வளாகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்கள் பொதுமக்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. மாம்பலம் ரெயில் நிலையம் நேற்று ஜவுளி வாங்க படையெடுத்து வந்த மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ரெங்கநாதன் தெரு முழுவதும் மக்கள் தலைகளாகவே இருந்தது.

பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலமும் வந்ததால் வடக்கு மற்றும் தெற்கு உஸ்மான் சாலை, பாண்டி பஜார், பர்கிட் சாலை என தியாகராயநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் போக்குவரத்து போலீசாருடன், சட்டம்-ஒழுங்கு போலீசாரும் ஈடுபட்டனர்.

தீபாவளி துணிமணிகள் வாங்க வந்த கூட்டத்தை பயன்படுத்தி பிக்பாக்கெட், வழிப்பறி, செயின்பறிப்பு போன்ற சமூகவிரோத செயல்களில் கொள்ளையர்கள் ஈடுபடாத வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தியாகராயநகர் பகுதி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் பொருத்தியுள்ளனர்.

 பிக்பாக்கெட், வழிப்பறியில் ஈடுபடும் திருடர்களின் புகைப்படங்களை சுவரொட்டிகளாகவும், திரையில் ஒளிபரப்பியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒலிபெருக்கிகளில் அறிவிப்பதன் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாதாரண உடையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். உயரமான கண்காணிப்பு கோபுரங்களில் நின்று பைனாகுலர் மூலம் கூட்டத்தை கண்காணித்தனர்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 29 ஆம் தேதி வரை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

click me!