மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மறைவு தமிழகத்தையே உலுக்கி உள்ளது. அவரின் மறைவை தொடர்ந்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கட்சி தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். லட்சக்கணக்கான பொதுமக்கள் நேரில் சென்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர், விஜயகாந்தின் மனைவி மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் “ மத்திய அரசு சார்பாக பிரதமர் மோடி என்னை அனுப்பி வைத்தார்.. பிரதமர் மோடி சார்பில் ஒரு மலர்வளையம் சமர்ப்பித்தேன். கேப்டன் மக்களுக்காக பாடுபட்டவர். அவரின் வீட்டிற்கு வந்தவர்களுக்கு சாப்பாடு போடாமல் திருப்பி அனுப்பியதில்லை என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்று அவசியமில்லை.
கேப்டனின் மனம் ரொம்ப இளகிய மனம். தனக்கும் கிடைக்கும் வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உணர்ந்து, பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே சாப்பாடு கிடைக்க வேண்டும் என்ற புதிய பழக்கத்தை கொண்டு வந்தவர். அரசியலில் விஜயகாந்த் போல மனிதநேயமிக்க ஒரு தலைவரை பார்ப்பது அரிது. அந்த மாதிரி குணம் கொண்ட கேப்டன் விஜயகாந்த் இன்று நம்மிடையே இல்லை.
அவர் இல்லாத துக்கத்தை எடுத்து சொல்லவும், வர்ணிக்கவும் வார்த்தைகளே இல்லை. இன்று அவரை கடைசியாக பார்க்க வேண்டும் என்று கோடானக்கோடி மகக்ள் இன்று வந்திருக்கின்றனர். ஒரு மனிதநேயமிக்க, தன் பணத்தால் மற்றவர்களுக்கு உதவக்கூடிய ஒரு நல்ல தலைவரை நாம் இழந்துவிட்டோம்.. அவரை இழந்த வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.