கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் ராஜ்குமாரின் 94-வது பிறந்த நாளான இன்று அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் ராஜ்குமாரின் 94-வது பிறந்த நாளான இன்று அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
1929-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் சிங்காநல்லூர் புட்டஸ்வாமய்யாவின் ராஜ்குமாரின் இயற்பெயர் முத்துராஜு. தனது 8 வயதில் குப்பி நாடக நிறுவனத்தில் நாடக கலைஞராக சேர்ந்தார். இங்கு தான் அவர் நடிப்பையும், பாடல் பாடவும் கற்றுக்கொண்டார். பெதர கண்ணப்பா 1954-ம் ஆண்டு படத்தின் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து கன்னட ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
தனது திரை வாழ்க்கையில் 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ள 11 கர்நாடக மாநில பிலிம்ஃபேர் விருதுகளையும், 10 தென்னிந்திய பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 2 முறையும், சிறந்த பாடகருக்கான தேசிய விருதையும் ராஜ்குமார் பெற்றுள்ளார். இவை தவிர நாட்டின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், தாதா சாஹேப் பால்கே உள்ளிட்ட விருதுகளும் அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்ன.
1968-ம் ஆண்டில் ராஜ்குமார் ஹீரோவாக 16 படங்கள் வெளியாகின. தனது வாழ்நாள் முழுவதும் கன்னட மொழியில் மட்டுமே அவர் நடித்தார். மற்ற மொழிகளில் அவருக்கு அதிக தேவை மற்றும் வாய்ப்புகள் இருந்தும், பிற மொழிகளில் அவர் நடிக்கவே இல்லை. கன்னட மற்றும் கர்நாடகாவின் நலனுக்காக "கோகக் சலுவாலி" போன்ற பல எதிர்ப்பு ஊர்வலங்களில் ராஜ்குமார் பங்கேற்றார். கன்னட கலாச்சாரம் மற்றும் மக்களின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் ராஜ்குமார் குரல் கொடுத்தார்.. அதனால்தான் கன்னட மக்கள் இன்றும் அவரைத் தங்கள் சொந்தச் சகோதரனாக கருதி அவரை கொண்டாடி வருகின்றனர்.
தனது ஆரம்ப நாட்களில் நடித்த படங்களை தவிர, மற்ற படங்களில் சிகரெட் புகைப்பது போன்றோ அல்லது மது அருந்துவது போன்றோ அவர் நடித்தது இல்லை. நிஜ வாழ்க்கையிலும் ராஜ்குமார் புகைப்பிடிக்கும், மது அருந்தும் பழக்கம் இருந்ததில்லை. தினசரி யோகாசனங்களைச் செய்து, கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து வந்தார்.
இந்திய அரசியலில் ஈடுபட அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தபோதிலும், அவர் தீவிர அரசியலில் நுழைவதைத் தவிர்த்த ராஜ்குமார் முழு நேர நடிகராக மட்டுமே இருந்தார். அவர் கடைசியாக நடித்த படம் சப்தவேதி.
நடிகராக மட்டுமின்றி டாக்டர் ராஜ்குமார் ஒரு பாடகராகவும் நன்கு அறியப்பட்டவர். இந்தியாவிலேயே தனது பாடலுக்காக தேசிய விருது பெற்ற ஒரே நடிகர் ராஜ்குமார் மட்டுமே. "ஜீவன சைத்ரா" படத்தில் "நாதமய" பாடலுக்காக அவர் தேசிய விருதை வென்றார். அவர் பல பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். குப்பி வெரன்னாவின் நாடகக் குழுவில் இருந்தபோது கிளாசிக்கல் இசையில் பயிற்சி பெற்றார். அந்த நேரத்தில், ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் கிளாசிக்கல் இசை பற்றிய அறிவு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்குமாருக்கு நல்ல குரல் வளம் இருந்தது, அவருடைய பாடல்கள் அனைத்தும் பிரபலமானவை. காதல் முதல் மிகவும் கிளாசிக்கல் வரை அனைத்து வகையான பாடல்களையும் பாடுவதில் அவர் சிறந்து விளங்கினார். ராஜ்குமார் பர்வதம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சிவராஜ் குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் என மூன்று மகன்களும், லட்சுமி, பூர்ணிமா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் கடைசி மகன் புனித் ராஜ்குமார், அக்டோபர் 29, 2021 அன்று மாரடைப்பால் காலமானார்.
கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி, ராஜ்குமார் சந்தன கடத்த வீரப்பனால் கடத்தப்பட்டார். தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தொட்டகஜனூரில் இருந்த தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்த போது ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேரை கடத்தினார் வீரப்பன். 108 நாட்கள் கழித்த பிறகு தமிழக - கர்நாடக அரசுகள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ராஜ்குமார் காயமின்றி விடுவிக்கப்பட்டார். அவர் கடத்தப்பட்ட சம்பவம் தமிழகம், கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நடா சார்வபௌமா (நடிகர்களின் சக்கரவர்த்தி), பங்கராட மனுஷ்யா (தங்கமானமனிதர்), மற்றும் அன்னவரு (மரியாதைக்குரிய மூத்த சகோதரர்) போன்ற பல்வேறு பெயர்களால் ராஜ்குமார் அழைக்கப்பட்டார்.