பசுக்கள் வளர்க்கும் விவசாயிகள் கம்பி நேப்பியர் ஒட்டுப்புல் என அழைக்கப்படும் சி.என். 4 ரக புல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதால் பால் உற்பத்தியை எளிதாகப் பெருக்கலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இந்த ரகம், குறைந்த பரப்பில் அதிக மகசூல் தரும் புல் ரகமாகும்.
இந்த தீவனப் பயிரை உற்பத்தி செய்வதால் குறைந்த இடத்தில் அதிக பசுந்தீவன புல்லை உற்பத்தி செய்து பால் உற்பத்தியைப் பெருக்கலாம்.
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், அதிகத் தூர்களுடன் வளரக்கூடிய ஒரு பல்லாண்டு தீவனப் பயிராகும்.
தண்டுகள் மிகவும் மிருதுவான, இனிப்பான, சாறு நிறைந்த, குறைந்த நார்ச்சத்தைக் கொண்டவை.
அதிக தூர்களுடன் (செடிக்கு 30 முதல் 35 தூர்கள்) சாயாத் தன்மை கொண்டது.
அகலமான, மிருதுவான இலைகள் அதிக இலை தண்டு விகிதம் கொண்டவை.
இவ்வகை பயிரை எளிதில் பூச்சிகள், நோய்கள் தாக்காது.
அதிக உலர் தீவன மகசூல், புரதச்சத்து கொண்டவை.
ஆண்டுக்கு ஏழு முறை அறுவடை செய்யலாம். இதனால் ஏக்கருக்கு 350 முதல் 400 டன் அளவுக்கு மகசூல் பெறலாம்.
கால்நடைகளுக்குப் பசுந்தீவனப் புற்கள் கொடுப்பதால் பால் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் ஏ எனும் உயிர்ச்சத்து கிடைக்க வழிவகை ஏற்படுகிறது. இதனால், கால்நடைகளின் கண்பார்வை, சுவாச மண்டலத்தின் செயல்பாடுகள் மேம்படுகிறது. மேலும், கால்நடைகளின் கரு உருவாவதற்கும், உருவான கருவைத் தக்க வைப்பதற்கும் பசுந்தீவனப் புற்கள் வழிவகை செய்கின்றன.
சாகுபடி தொழில்நுட்பம்:
ஆண்டு முழுவதும் எல்லா வகை மண் வகைகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் புல்லைப் பயிரிடலாம்.
நிலத்தை இரும்புக் கலப்பையைக் கொண்டு 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். நிலத்தைப் பண்படுத்திய பிறகு 60 செ.மீ. இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும்.
மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரங்களை இட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால், 1 ஏக்கருக்கு அடியுரமாக 25 டன் மக்கிய தொழுஉரம், 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதால் மகசூலை நிலை நிறுத்தலாம்.
பாத்திகள் அமைக்கப்பட்ட நிலத்தில் நன்கு நீர்ப் பாய்ச்சிய பின் தண்டுக் கரணையை 60-க்கும் 50 செ.மீ. இடைவெளியில் செங்குத்தாக நடவு செய்ய வேண்டும்.
இவ்வாறு நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 33 ஆயிரத்து 333 கரணைகள் தேவைப்படும். கரணை நட்ட 3-ஆவது நாளில் உயிர் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.
பிறகு 10 நாள்களுக்கு 1 முறை நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.
கரணை நட்ட 20-ஆவது நாள் ஒரு கைக்களை எடுக்க வேண்டும். நடவுக்குப் பின் 75 முதல் 80 நாள்களில் முதல் அறுவடையும், அடுத்தடுத்து 45 நாள்களிலும் தீவனப் பயிர்களை அறுவடை செய்யலாம்.
இவ்வாறு சாகுபடி மேற்கொண்டால், 1 ஹெக்டேரில் 1 ஆண்டுக்கு 7 அறுவடைகளில் 350 முதல் 400 டன் பசுந்தீவன மகசூல் உற்பத்தி செய்யலாம்.
எனவே கறவைமாடு வளர்க்கும் விவசாயிகள் குறைந்தபட்ச நிலத்திலாவது, கோ (சிஎன்) 4 ரக புல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் பால் உற்பத்தியை எளிதாக பெருக்கலாம்.
மேலும் நகர்புற அருகில் உள்ள விவசாயிகள் இப்புல்லை உற்பத்தி செய்து, பசும்புல்லை, ஒரு கிலோ ரூ.5 வரையில் விற்பனை செய்யலாம். இந்தப் புல்லில் தண்டுக்கரணை உற்பத்தி செய்து விற்பதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:58 AM IST