தோட்டக்கலைப் பயிர்களான மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு சாகுபடியில் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் செலவினங்களைக் குறைத்து, கூடுதல் வருவாய் பெறலாம்.

தருமபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் 50 சதம் தோட்டக்கலை பயிர்களாகும். இதில் மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு சாகுபடி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்த மாவட்டத்தில் மஞ்சள் 15,000 ஹெக்டேரிலும், மரவள்ளிக் கிழங்கு 20,000 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. நீர் பற்றாக்குறை, வேலையாள்கள் பிரச்னை போன்றவற்றை விவசாயிகள் சந்தித்து வரும் நிலையில், இவற்றை மாற்றுப் பயிராகச் சாகுபடி செய்வது நல்ல தேர்வாகும்.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மரவள்ளி, மஞ்சள் சாகுபடிப் பணிகளை இயந்திர மயமாக்க விவசாயிகளுக்கு நவீனக் கருவிகளை தோட்ட்க்கலைத் துறை வழங்கி வருகிறது.

மரவள்ளி நடவு குச்சிகளை வெட்டும் கருவி, அறுவடைக் கருவி, மஞ்சள் அறுவடைக் கருவி, மஞ்சளை வேக வைக்கும் கொதிகலன் போன்றவற்றுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் வடிவமைத்த இயந்திரங்கள் 50 சத மானியத்தில் வழங்கப்படுகின்றன.

மரவள்ளிக் குச்சிகளை வெட்டும் இயந்திரத்தின் மூலம் சம அளவிலான குச்சிகளைப் பயன்படுத்தவது மட்டுமல்லாமல், நடவுச் செய்யப்படும் துண்டுகள் சேதம் அடைவது தவிர்க்கப்படுகிறது.

இதனால், கிழங்கின் வேர் பிடிக்கும் தன்மை அதிகரித்து, கூடுதல் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், வேலையாள்களின் பணி நேரமும், கூலிச் செலவும் குறைகிறது.

மஞ்சள் அறுவடை இயந்திரம், கொதிகலன் இயந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தவதுன் மூலம் விவசாயிகளுக்குச் செலவு குறைகிறது. மேலும்,கூடுதல் வருவாயும் கிடைக்கும்.

மஞ்சள் கிழங்கை வேக வைக்க நவீனக் கொதிகலன்களைப் பயன்படுத்தினால், 60 சத தண்ணீர் மிச்சப்படும். கூலிச் செலவு குறைகிறது. எரிபொருளின் தேவையும் 50 சதம் வரை குறையும். மேலும்,ஒரே சம அளவில் கிழங்கு வேக வைக்கப்படுவதால் தரம் மேம்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.