கறவை மாடுகளை தாக்கும் மிக முக்கியமான நோய் இதுதான்…
கறவை மாடுகளை அதிகளவில் தாக்கக் கூடிய நோய்களில் மடிவீக்க நோய் மிக முக்கியமானது. இந்த நோயிலிருந்து கறவை மாடுகளைப் பாதுகாக்க இந்த வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகளவில் பால் கொடுக்கும் கலப்பினக் கறவை மாடுகளை பெருமளவில் மடி வீக்க நோய் தாக்க வாய்ப்புள்ளது. இதனால், கறவைகளிடம் பால் உற்பத்தி குறைவதுடன் மிகுந்த பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகின்றன.
இந்த நோயால் பால் மடியில் உள்ள திசுக்கள் பாதிப்படைந்து மடி வீக்கமாகவும், தடித்தும் காணப்படும். பால் திரிந்தோ அல்லது சில நேரங்களில் பாலுடன் ரத்தம் கலந்தோ, பால் தண்ணீர் போன்றோ காணப்படும். உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்காவிடில் மடியின் பால் சுரப்பிகள் நிரந்தரமாகக் கெட்டு பால் சுரக்கும் தன்மையை இழக்கக்கூடும்.
மடிவீக்க நோய் வந்தபின் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதைவிட சுகாதாரமான முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோய் கிருமிகளின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைத்து நோய் வராமல் தடுக்க முடியும்.
மாட்டுத் தொழுவத்தில் சாணம், சிறுநீர் தேங்க விடாமல் கவனிப்பதுடன், கிருமி நாசினி மருந்தைக் கொண்டு தொழுவத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
பால் கறப்பதற்கு முன்னும், பின்னும் பொட்டாசியம் பெர்மாக்கனேட், அயோடோபோர் ஆகிய கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
பால் கறப்பதற்கு பால் கறவை இயந்திரத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்ட நவீன மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமாகவும் மடிவீக்க நோய் வராமல் தடுக்க முடியும்.