ஒரு ஏக்கர் மகசூலை, அரை ஏக்கரில் பெறலாம். நீங்களும் இந்த ரக நிலக்கடலையை பயன்படுத்தினால்…
எண்ணெய் எடுப்பதற்காகவும், உணவுப் பண்டமாகவும் நிலக்கடலை அதிகம் பயன்படுகிறது. இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால்தான் இறவையிலும், மானாவாரியிலும் அதிகளவில் பயிரிடுகிறார்கள்.
தென்மாவட்டங்களில் இறவையை விட மானாவாரியில்தான் அதிக பரப்பில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது.
ஒரு ஏக்கர் பரப்பில் ஒட்டு ரகம் தரும் மகசூலை 50 சென்ட் நிலத்தில் இந்த ரகம் தருகிறது.
பசுமைப் புரட்சிக்குப் பிறகுதான் எல்லா நிலத்துலயும் ரசாயனத்தைக் கொட்டி மண்ணைப் பாழாக்க ஆரம்பித்தனர்.
நம்மாழ்வார் வந்து இயற்கை விவசாயம், நஞ்சில்லா விவசாயம்ங்கிற வார்த்தையையே சொல்லி நாம் தெளிவடைய பல ஆண்டுகள் கடந்துச்சு.
‘ரசாயனம் உரம் போட்ட இடத்துல ஒரு மண்புழுவைக்கூடப் பார்க்க முடியாது’னு ஒரு கட்டுரையில் நம்மாழ்வார் அய்யா சொல்லியிருப்பார். தோட்டத்துல மண்புழுவை பார்த்தா தான் அது நல்ல தோட்டம்.
இயற்கை விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்கும்.
ரெண்டு ஏக்கர் நிலத்துல லக்னோ-49 ரக கொய்யாவை நட்டு இருக்கேன். அதுக்கு ரெண்டு வயாசாகுது. என்று தன்னுடைய இயற்கை விவசாய அனுபவத்தை சொல்கிறார் தாமோதரன்.
மீதமுள்ள நாலு ஏக்கர் மானாவாரி நிலம். இதுல மொச்சை, உளுந்து தட்டாம்பயிறு (தட்டைப்பயிறு )னு சீசனுக்கு ஏத்தமாதிரி போடுவேன். ஆனா, எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது. அதனால இப்போ நாலு வருசமா நிலக்கடலையை சாகுபடி செய்றேன்.
இது, மணல் கலந்த செம்மண்நிலம். ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஒரு ஆங்கில செய்தித்தாள்ல, மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ‘டி.ஜி-37-ஏ’ ரக நிலக்கடலை வறட்சியைத் தாங்கி வளர்றதோட அதிகமான மகசூலையும் தரும்.
மானாவாரி நிலத்துக்கு மிகவும் ஏற்ற ரகம். திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சோதனைக்காக நடவு செய்யப்பட்டுள்ளதுன்னு ஒரு செய்தியைப் படிச்சேன். உடனே காந்திகிராம பல்கலைக்க்ழகத்துக்குப் போயி பத்து கிலோ விதைக்கடலை வாங்கிட்டு வந்து, பத்து சென்ட் நிலத்துல மானாவாரியாக விதைச்சேன்.
110 கிலோ வரை மகசூல் கிடைச்சது. அந்தக் கடலையை விதைக்காக சேமிச்சுவச்சு ஆடிப்பட்டத்துல விதைச்சேன். வழக்கமான ஒட்டு ரகத்தை விட கூடுதல் மகசூல் கிடைச்சது. மூணு ஏக்கர் இடத்துல ஒட்டு ரக கடலையும், 50 சென்ட் நிலத்துல அணு ஆராய்ச்சி மையத்தின் கடலையும் போட்டு அறுவடை செய்திருக்கேன் என்று சொன்ன தாமோதரன்.
ஒரு ஏக்கர் மகசூல் அரை ஏக்கரில் கிடைக்கும்!
“ஒரு ஏக்கர் பரப்புல ஒட்டு ரக நிலக்கடலை சாகுபடி செஞ்சதுல 1,150 கிலோ கிடைச்சது, ஆனா, அணு ஆராய்ச்சி மைய கடலை 50 சென்ட் பரப்புலயே 1,100 கிலோ மகசூல் கிடைச்சுது. ரெண்டு ரக கடலைக்குமே ஒரே விலைதான். கிலோ 30 ரூபாய்னு வியாபாரிகிட்டயே விற்பனை செய்துட்டேன்.
பருப்ப உடைச்சு வித்தா கூடுதலா லாபம் கிடைச்சிருக்கும். கிடைச்சது போதும்னு கடலையாகவே வித்துட்டேன். கடலைச் செடிகளை நிலத்தில் அப்படியே காய விட்டு அடுத்த முறை விதைக்கும் போது அடியுரமாக மடக்கி உழுறதுக்காக போட்டிருக்கேன்.
ஒரு ஏக்கர், ஒட்டு ரக கடலை மூலமா 34,500 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல செலவு போக, 14,900 ரூபாய் லாபமா கிடைச்சது. அணு ஆராய்ச்சி மைய ரகத்துல, 50 சென்ட்ல 33,000 ரூபாய் வருமானமா கிடைச்சுது. இதுல செலவு போக 24,450 ரூபாய் லாபமா கிடைச்சுது.
தண்ணீர் செலவே இல்லாம மானாவாரியா வெறும் 50 சென்ட் இடத்துல இது, நல்ல லாபம்தான்” என்றவர் சந்தோசத்தில் கை நிறைய கடலைகளை அள்ளிக் காட்டினார்.
சாகுபடி செய்யும் முறைகள்:
50 சென்ட் நிலத்தில் அணு ஆராய்ச்சி மைய ரகமான ‘டி.ஜி.37 -ஏ’ ரக நிலக்கடலையை மானாவாரியில் சாகுபடி செய்யும்விதம் குறித்து சுகேந்திரன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் மாடமாக இங்கே…
சித்திரை மாதம் கோடை உழவு செய்ய வேண்டும். அக்னி நட்சத்திர வெயிலில் உழவு செய்தால், மண்ணில் உள்ள பூச்சிகள், புழுக்கள், கூடுகள் வெயிலில் பட்டு சுருண்டு சாகும். உழவு செய்த பிறகு, ஆறு நாள் இடைவெளி விட்டு மீண்டும் உழவு செய்ய வேண்டும்.
இதே போல, 6 நாள் இடைவெளியில் மொத்தம் நான்கு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, ஆனி மாதம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு நான்கு டிராக்டர் மட்கிய குப்பையை சிதறி விட்டு ஓர் உழவு ஓட்ட வேண்டும். அப்போதுதான் மண் பொலபொலப்பாக இருக்கும்.
அப்படி இருந்தால்தான் முளைப்புத் திறன் அதிகரிக்கும். ஆடி மாத தொடக்கத்தில் ஒரு மழை பெய்ததும் புல், களைகள் முளைத்து நிற்கும். களையை அழிப்பதற்காக, ஆடி மாதக் கடைசியில் ஓர் உழவு உழுதுவிட்டு , மீண்டும் ஒரு மழை பெய்ததும் ஒரு சால் ஓட்டி சாலில் விதைக் கடலையைப் போட வேண்டும். 50 சென்ட் நிலத்துக்கு 25 கிலோ ( அணு ஆராய்ச்சி மைய ரகம்) விதைக் கடலை தேவைப்படும்.
ஆடி மாதக் கடைசியில் வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதால், முளைப்புத் திறன் நன்றாக இருக்கும்.
இரண்டு முறை களையெடுப்பு!
விதைத்த 8 முதல் 10ம் நாளில் முளைப்பு தெரியும். 25 மற்றும் 35 ம் நாட்களில் களையெடுக்க வேண்டும். மதல் களை எடுக்கும்போது லேசாக மணலைச் சுரண்டி களை எடுக்க வேண்டும்.
இரண்டாவது களை எடுக்கும்போது நிலத்தை சற்று ஆழமாகக் கொத்தி மண்ணை பொலபொலப்பாக்கி வைக்க வேண்டும். 35 முதல் 40 நாளில் பூ பூத்து விடும். 40 -ம் நாள், ஏற்கெனவே களை எடுக்கும்போது பொலபொலப்பாக்கி வைத்திருக்கும் மண்ணை செடியோடு அணைத்து விட வேண்டும். மண் அணைத்த பகுதியில் தான் கடலைச்செடி வேர்பிடித்து மண்ணில் இறங்கி வளரும்.
இரண்டு முறை இ.எம்..!
மண் அணைத்தவுடன் 10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி இ.எம் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். அதே போல, 55- ம் நாளும் இ.எம் தெளிக்க வேண்டும். இயற்கை முறை விவசாயத்தில் நோய்த்தாக்குதல் ஏற்பட வாய்ப்பு குறைவு. இதைத் தவிர வேறெந்த பராமரிப்பும் செய்யத் தேவை இல்லை.
100 முதல் 105 நாட்களுக்கு மேல்மட்ட இலைகளில் கரும்புள்ளி மற்றும் மஞ்சள் நிறம் தென்படும். அந்த நேரத்தில் சில செடிகளைப் பறித்து கடலைக் காய்களை உரித்தால், ஓட்டின் உட்புறம் பழுப்பு கலந்த கறுப்பு நிறத்தில் இருந்தால், அறுவடைக்கு தயார் ஆகிவிட்டது எனத் தெரிந்துகொள்ளலாம். 110 முதல் 120 நாட்களுக்கு அறுவடை செய்யலாம்”.
கடலை சாகுபடியில் கவனிக்க வேண்டியவை:
உலக அளவில் இந்திய எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் முதல் இடத்திலும் உள்ளது. நிலக்கடலைக்கு ஊடுபயிராக தட்டைப்பயிறு, கம்பு, உளுந்து, துவரை சூரியகாந்தி ஏற்றது.
இதனால் நோய்த்தாக்குதல் குறைவதுடன் உபரி வருமானமும் பெறலாம். . அறுவடை நேரத்தில் தண்ணீர் தெளித்தால், கடலைச் செடியைப் பறிக்க சுலபமாக இருக்கும். மண்ணில் ஈரப்பதம் இருந்தால், தண்ணீர் தேவையில்லை.
பறித்த செடிகளைக் குவியலாகப் போட்டு வைக்கக் கூடாது. ஈரமாக இருக்கும்போது செடி வளரத் தொடங்கும். அறுவடை செய்த கடலைக் காய்களை 4 முதல் 5 நாட்கள் வெயிலில் காய வைத்துத் தான் சேமித்து வைக்க வேண்டும். கடலை மீது ஈரப்பதம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இறவை சாகுபடியை விட மானாவாரி சாகுபடியில் அடியுரம் கூடுதலாகப் போட்டால்தான் வறட்சியைத் தாங்கி வளரும். செம்மண் நிலத்தைப் பொறுத்த வரையில் மண் இறுக்கம்தான் கடலையின் மகசூலைப் பாதிக்கிறது.
எனவே, மண் இறுக்கம் போக்க, ஆழமான உழவு மற்றும் குறுக்கு உழவு அவசியம். மானாவாரியைப் பொறுத்தவரை மழை தாமதமாக பெய்தால் கூட கவலையில்லை. முளைத்து, பூத்த பிறகு மழை கிடைத்தால் போதும். காய்ச்சலுக்குப் பிறகான தண்ணீர் பாய்ச்சலும் நல்ல மகசூலைத் தரும்.