எருமைகளுக்கு ஏற்படும் கருப்பை வெளித்தள்ளுதல் பிரச்சனைக்கு தீர்வு இதோ…
கருப்பை வெளித்தள்ளுதல் பிரச்சனை எந்தெந்த காரணங்களால் ஏற்படுகிறது.
கன்று ஈன்ற பின் அதிகப்படியான முக்குதல். மிகவும் தொய்வடைந்த நிலையில் இருக்கும் கருப்பை. நஞ்சுக்கொடி தங்குதல். மிகவும் விரிவடைந்த நிலையை அடையும் எருமை மாடுகளின் இடுப்புப் பகுதியும், அதனைச் சார்ந்த தசை நார்களும் கருப்பை வெளித் தள்ளுதலுக்கு மிகவும் முக்கிய காரணமாக அமைகின்றன.
மேய்ச்சலுக்கு செல்லாமல் கட்டியே வைத்து பராமரிக்கப்படும் மாடுகளில் பாதிப்பு அதிகமாகக் காணப்படும். கன்று ஈன்ற பின் மாட்டின் பின்னங்கால் பள்ளத்திலும் முன்னங்கால்கள் உயர்ந்த பகுதியிலும் இருந்தால் கருப்பை வெளித்தள்ளுதல் உண்டாகும்.
கன்று ஈனமுடியாத மாடுகளில் கன்றை வெளியே எடுக்க முயற்சிக்கும் போது அதிகமான இழுதிறனைப் பயன்படுத்தினால் கருப்பை வெளித்தள்ளுதல் உண்டாகும். கன்று ஈன்றபின் கருப்பை நன்றாகச் சீக்கிரம் சுருங்க வேண்டும். அப்படி ஏதாவது ஒரு குறைபாட்டால் கருப்பை சுருங்குவதில் தாமதம் ஏற்பட்டால் கருப்பை பிதுக்கம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.
கன்று ஈன்றுவதில் தாமதம் ஏற்படும் போது கருப்பை இறந்து உலர்ந்த கன்றை அழுத்தமாகச் சுற்றிக்கொள்ளும் இறந்த கன்றை வெளியே இழுக்கும்போது கருப்பை வெளியே வந்துவிடும். அதிகமான கன்று ஈன்ற மாடுகளில் இப்பிரச்னை அதிக அளவில் ஏற்படும். தீவனப் பற்றாக்குறை மற்றும் பிற காரணங்களால் இளைத்துப் போன மாடுகளில் கருப்பை பிதுக்கம் உண்டாகும்.
பால் காய்ச்சலால் பாதிக்கப்படும் மாடுகளில் கருப்பைப் பிதுக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. கருப்பை பிதுக்கம் பரம்பரையாகத் தொடரும் பிரச்னையில்லை என்றாலும் அரிதாக பாதிக்கப்பட்ட மாடுகளின் கன்றுகள் வளர்ந்து கன்று ஈனும்போது அந்த மாடுகளிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
கன்று ஈனுவதற்கு முன்பு கருப்பை வாய் பிதுக்கம் உண்டானால் கன்று ஈன்றபின் கருப்பை பிதுக்கம் ஏற்பட வாய்ப்பு குறைவுதான் என்றாலும் விவசாயிகள் கருப்பைப் பிதுக்கம் ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கை கொள்கிறார்கள்.
ஒருமுறை கருப்பைப் பிதுக்கம் ஏற்பட்ட எருமைகளில் அடுத்த முறை கன்று ஈனும் போதும் கருப்பைப் பிதுக்கம் ஏற்பட வாய்ப்பு குறைவு தான்.
அறிகுறிகள்:
கருப்பை பிதுக்கம் ஏற்பட்ட எருமைகளில் அறிகுறிகள் கண்டுபிடிப்பது எளிதானதாகும்.
கருப்பை வெளித்தள்ளிய மாடுகள் பெரும்பாலும் படுத்துக்கொண்டு முக்கிக் கொண்டிருக்கும்.
அதே நின்ற நிலையில் இருந்தால் வரை தொங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலும் நஞ்சுக்கொடி கருப்பையில் ஒட்டிக் கொண்டிருக்கும்.
கருப்பை மீது தீவனங்களும், மண், சாணம் போன்றவைகள் ஒட்டிக் கொண்டிருக்கும்.
வெகுநேரம் பாதிக்கப்பட்ட எருமைகளில் கருப்பை உலர்ந்து, வீங்கி, இரத்தப்போக்குடன் காணப்படும்.
இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட மாடுகளில் உடனடிச் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பிதுங்கிய
கருப்பையின் இரத்தக் குழாய்கள் கிழிந்து எருமை இறக்க நேரிடும்.
சிகிச்சை:
கருப்பை வெளித்தள்ளிய எருமைகளுக்கு உடனடியாகச் சிகிச்சை அளித்தால் எருமையின் உயிரையும் காப்பாற்றி அதன் சினைப்பிடிக்கும் திறனை இழக்காமல் பாதுகாக்க முடியும்.
கிராமப்புறங்களில் கால்நடை மருத்துவரை அழைக்காமல் எருமையின் இனப்பெருக்கம் தெரியாத அனுபவமற்ற நபர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் போது கருப்பைக் கிழிந்த மாடு இறக்க நேரிடும். ஏனெனில் இது எருமையின் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் பிரச்னையாகும்.
கால்நடை மருத்துவரை அழைப்பதற்கு முன் கருப்பை வெளித்தள்ளிய எருமைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வெளித்தள்ளிய கருப்பையை நாய்கள் மற்றும் இதர பிராணிகள் சேதப்படுத்திவிடும்.
கால்நடை மருத்துவர் வரும்வரை வெளித்தள்ளிய கருப்பையை ஈரத்துணியால் மூடி வைக்க வேண்டும்.
நின்ற நிலையில் எருமைகள் இருந்தால் தொங்கிக் கொண்டிருக்கும் கருப்பையை கோணிப்பையால் தூக்கி பெண்ணின வெளிப்புற உறுப்பு வரை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் வெளித்தள்ளிய கருப்பைக்கு இரத்தம் தடையின்றி சென்று வருவதால் வீங்குவது தவிர்க்கப்படும். மேலும் மூத்திரப்பையில் சிறுநீர் சேகரமாவது தவிர்க்கப்பட்டு எருமையின் முக்கல் குறையும்.
எளிதான சிகிச்சை செய்ய எருமை மாட்டின் முன்புறம் தாழ்ந்தும் பின்புறம் உயர்ந்தும் இருந்தால் நல்லது. படுத்த நிலையில் உள்ள மாடுகளின் பின்புறத்தை வைக்கோல் நிரப்பப்பட்ட கோணிப்பையைக் கொண்டு உயர்த்தினால் சிகிச்சைக்கு ஏதுவாக இருக்கும்.
இரவு நேரத்தில் இப்பிரச்னை ஏற்பட்டால் எருமைகளை நல்ல வெளிச்சம் உள்ள இடத்திற்கு மாற்ற வேண்டும். அல்லது எருமை இருக்கும் இடத்தில் மின்சார பல்புகளைக் கொண்டு நல்ல வெளிச்சம் உண்டாக்க வேண்டும்.
பகல் நேரமாக இருந்தால் வெளித்தள்ளிய கருப்பை மீது சூரியஒளி படாதவாறு ஈரத்துணியால் கருப்பையைச் சுற்றி வைக்க வேண்டும்.
கால்நடை மருத்துவர் தக்க சிகிச்சை அளித்து கருப்பையை உள்ளே தள்ளி சிகிச்சை செய்தவுடன் தண்ணீர் மற்றும் தீவனத்தை சிறிது சிறிதாக அடிக்கடி கொடுக்க வேண்டும்.
ஒரே வேளையில் நிறைய தீவனத்தைக் கொடுக்க வேண்டும். அடுத்தடுத்த நாட்களிலும் மருத்துவரைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.