பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், கருப்பட்டிக்கு நல்ல மவுசு உண்டு…
பனையின் முதன்மையான விளைபொருள் பதநீர். பனையின் ஆண் மற்றும் பெண் மஞ்சரிகளில் இருந்து பதநீர் எனப்படும் சுவை மிகுந்த சாறு கிடைக்கிறது. பதநீர் சுவையாகவும், ஓரளவு அமிலத்தன்மையுடனும் இருக்கும். காலைப் பதநீரும், மாலைப்பதநீரும் பருகுவதற்கு சுகம்.
பதநீர் கிடைக்கும் இடங்களில், குறிப்பாக மழை மற்றும் காற்று காலங்களில் பதநீரின் தரம் குறையும். ஒரு பனையிலிருந்து 3 முதல் 5 மாதங்கள் வரை பதநீரைப் பெறலாம். இதில் 3 மாதங்கள் அதிக அளவில் பதநீர் கிடைக்கும்.
பானைகளிலிருந்து பதநீரைப் பெற ஏதுவாக சில ஓலைகளை வெட்டி அப்புறப்படுத்தி விட வேண்டும் பனையில் 30 சதம் வரை ஓலைகளை வெட்டுவதால் பதநீர் உற்பத்தி மற்றும் பதநீர் சுரப்புக் காலம் அதிகரிக்கும். பெண் பனைகள் ஆண் பனைகளைக் காட்டிலும் 33 சதம் முதல் 50 சதம் வரை அதிகம் பதநீரை தரும்.
ஆண் பனைகளில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையும், பெண் பனையில் பிப்ரவரி முதல் மார்ச் வரையிலும் பதநீர் கிடைக்கும்.
ஒருபனை மரம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 60 லிட்டர் பதநீர் தர ஆரம்பிக்கும். இது அடுத்தடுத்த ஆண்டுகளில் 70, 80, 90, 100 லிட்டர் பதநீர் எடுக்கலாம்.
பனை மரத்தில் ஆயுள் ஏறத்தாழ 150 ஆண்டுகள். பதநீரை காய்ச்சி அது பாகுபோல் ஆனதும், அந்தப்பாகினை மணல் தரையில் விசாலமான சிரட்டை (தேங்காய் ஓட்டின் ஒரு பாதி) மேல் மேல் நோக்கி இருக்குமாறு அதனைப்புதைத்து அதனுள் பாகினை ஊற்ற வேண்டும்.
பின்னர் அந்தப்பாகு ஒன்றிரண்டு நாட்களில் நன்கு கட்டியாக மாறும் வரை, அப்படியே வைத்திருக்க வேண்டும். அதன்பின் ஒவ்வொரு சிரட்டையையும் எடுத்து, தலைகீழாக வைத்து ஓரத்தில் ஒரு தட்டு தட்டினால் உள்ளிருக்கும் கருப்பட்டி, அச்சிலிருந்து விழும் சர்க்கரைப் போல் விழுந்து விடும்.
கருப்புக் கட்டிகளை பின்னர் கசிந்து விடாமல் இருக்க புகைப்பதனம் செய்யலாம். பதனம் செய்த கருப்பட்டிகளை பல மாதங்கள் கெடாமல் சேமித்து வைக்கலாம். இன்று 10 கிலோ கருப்பட்டியின் விலை ரூ.1500 – 1600. கருப்பட்டி முழுக்க முழுக்க இயற்கையானது. உடல் நலத்திற்கு ஏற்றது. ஒரு துண்டு கருப்பட்டியை கடித்து அரை சொம்பு தண்ணீரைக் குடித்தால் பசியாறும்.