இயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்.
வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது. ரசாயன உரங்களால் வயல்கள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
எனவே ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தவிர்த்து, இயற்கை வழி வேளாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உருவாகி உள்ளது.
நீர் வளங்களைப் பாதுகாத்து மாசற்ற நீரைத் தக்க வைத்தல், இயற்கைச் சூழல் மாசுபடாமல் காத்தல், உணவு நஞ்சாவதைத் தடுத்து உயிரினங்களைப் பாதுகாத்தல், மண்ணின் மலட்டுத் தன்மையை நீக்கி பொன் விளையும் பூமியாக மாற்றுதல், சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் கேடு ஏற்டாமல் தடுத்து, ரசாயன உரங்களைத் தவிர்த்து சாகுபடி செய்வதே இயற்கை வளாண்மை ஆகும்.
இயற்கை வழி வேளாண்மைக்கு மிகவும் அவசியமான இயற்கை உரங்கள் வ கையையும், அவற்றைத் தயாரிக்கும் முறையையும் காண்போம்.
கம்போஸ்ட் உரம்:
ஆடு, மாடு கழிவுகள் மற்றும் வீடு, தோட்டக் கழிவுகளை பள்ளத்தில் குவித்து, அதில் மண் புழுக்களை இட்டு மக்கச்செய்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை உரத்தால் பயிர்களுக்கு தழை, மணி, சாம்பல், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், கந்தகம் போன்ற உலோகச் சத்துகளும் கிடைக்கின்றன. பயிர் சாகுபடி வரையிலும் இந்த சத்துகள் பயன்படுகின்றன. இதுதவிர பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஜிம்ரலின், சைட்டோகனிஸ் ஆகிய வளர்ச்சி ஊக்கிகளும் கிடைக்கின்றன.
