முருங்கைக்காய் மரங்களில் வளராமல் செடிகளில் வளர்வது செடிமுருங்கை எனப்படுகிறது. இந்தச் செடி முறை விதைத்த 4 அல்லது 5 மாதங்களில் காய்க்கத் தொடங்குவதால் விரைவில் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். அதேபோல் ஒரு முறை விதைத்தால் மூன்று ஆண்டுகள் வரை காய்த்து விவசாயிகளுக்கு பயன்தரும். விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் இந்தச் செடிமுருங்கையை முறையாக சாகுபடி செய்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும்.
சாகுபடி முறைகள்:
செடிமுருங்கையைப் பொருத்தவரை பி.கே.எம் 1, கே.எம் 1, பி.கே.எம். 2 ஆகிய மூன்று இரகங்கள் உள்ளன. இந்த செடிமுருங்கை எல்லா வகையான மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது. இருந்தாலும் மணல் கலந்த செம்மண் பூமி, கரிசல் மண் பூமி ஆகியவற்றில் கூடுதல் மகசூல் கிடைக்கும். செடிமுருங்கையை ஜூன் - ஜூலை மாதங்களில் நடவு செய்யலாம். நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும் நடவு செய்யலாம். இவற்றை நடவு செய்ய ஏக்கருக்கு 200 கிராம் விதைகள் தேவைப்படும்.
முதலில் நிலத்தை நன்கு உழுது சமன் செய்து ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் 45 செ.மீ அகலம், 45 செ.மீ நீளம், 45 செ.மீ ஆழத்தில் குழிகள் தோண்ட வேண்டும். இவைகளை ஒரு வாரம் அப்படியே விட்டு விட்டு பிறகு குழிகளில் தொழு உரம் தேவையான 15 கிலோ அளவுக்கு இடவேண்டும். பின்னர் ஒரு வாரம் கழித்து தொழு உரம், மேல் மண் ஆகியவற்றை கலந்து 15 கிலோ அளவுக்கு இட வேண்டும். பின்னர் 3 செ.மீ ஆழத்தில் முருங்கை விதைகளை நட்டால் அவை முளைத்து வரும்.
விதைப்பதற்கு முன்னும், விதைத்து மூன்று நாள் கழித்தும் நீர் பாய்ச்ச வேண்டும். தேவையான அளவு தழைச் சத்து, சாம்பல் சத்து, மணிச்சத்து உரங்களை தங்கள் மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு அருகில் உள்ள விவசாயத் துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு கேட்டு பயன்படுத்த வேண்டும்.
விதைத்து இரண்டு மாதங்கள் கழித்து களை எடுக்க வேண்டும். செடிகள் 1 மீட்டர் வளர்ந்தவுடன் நுனிகளை கிள்ளி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பக்கக் கிளைகள் அதிகம் வளரும்.
செடிமுருங்கை 6 மாதத்தில் காய்க்கத் தொடங்கும். இதுபோல் ஒவ்வொரு காய்ப்புக்குப் பிறகும் செடியை வெட்டிவிட்டு மூன்று ஆண்டுகள் பராமரிக்கலாம். ஒவ்வொரு முறையும் தேவையான அளவு உரங்களை இடவேண்டும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 180 முதல் 200 காய்கள் வரை கிடைக்கும். ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 20 டன் வரை முருங்கைக்காய் கிடைக்கும்.
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை: பழ ஈக்களின் குஞ்சுகள் காயை தின்று சேதப்படுத்தும். இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அகற்ற வேண்டும். மானோகுரோடோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். மருந்து தெளிப்பதற்கு முன் காய்கள் இருந்தால் அவற்றை பறித்துவிட வேண்டும்.
பூ மொட்டு துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்த பூக்கள் தோன்ற ஆரம்பித்தவுடன் டைக்குளோர்வாஸ் ஒரு மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் 10 நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:57 AM IST