ஆட்டு பண்ணை வளர்ப்புக்கு அரசும், அரசு சார்ந்த நிதி நிறுவனங்களும் வங்கிக் கடன் கொடுக்கிறது. வங்கிக் கடன் கொடுக்க முதலில் திட்ட அறிக்கை கேட்பார்கள். 

ஆடு வளர்ப்பிற்கான திட்ட அறிக்கையை, நீங்கள் நான் முன்பே கூறியபடி உங்கள் அருகாமையிலுள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை அணுகி, திட்ட அறிக்கையைப் பெற முடியும். ஆடு வளர்ப்பிற்கான பயிற்சியையும் அவர்களிடமே பெற்று , வேண்டிய விபரங்களையும், உதவிகளை பெற முடியும்.

இந்த கால்நடை ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் வெள்ளாடு பயிற்சியில் கலந்துகொண்டு அவர்கள் கொடுக்கும் சான்றிதழ்களையும், மாதிரி திட்ட அறிக்கையும் உங்களுக்கு வங்கிக்கடன் வாங்க உதவியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்: ஆடு வளர்ப்பில் முதலிடம் பெறுவது ஈரோடு மாவட்டம். இரண்டாம் திருநெல்வேலி. மூன்றாம் இடத்தில் சேலம் மாவட்டமும் இருக்கிறது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி, சிவகங்கை என பத்து மாவட்டங்களில் சிறப்பாக ஆடு வளர்ப்பு தொழில் நடந்துவருகிறது.

மேய்ச்சல் நிலங்கள் ரியல் எஸ்ட்டேட் போன்ற தொழில்களால் அருகி வருவதால் ஆடு வளர்ப்போர் , வேறு தொழில்களுக்கு மாற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இதுபோன்றதொரு பண்ணை அமைத்து ஆடுவளர்ப்பதன் மூலம் தங்களின் தொழில்களைத் தொடரவும், வருவாயை இழக்காமலும் பார்த்துக்கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் பெரிய ஆட்டுச் சந்தைகள் : மேச்சேரி, மோர்பாளையம், திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆத்தூர், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், தூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரி, மணியாச்சி

மேற்கண்ட இடங்கள் அனைத்தும் அதிகளவு ஆடுகள் விற்பனை செய்யப்படுகிற பிரபலமான ஆட்டுச் சந்தைகளாகும்.