சினை மாடுகளுக்கு எப்படிப்பட்ட கவனிப்புகள் தேவை தெரியுமா?
சினை மாடுகளுக்குத் தேவைப்படும் கவனிப்புகள்...
** சினை ஊசி போட்ட நாளுடன் 280 நாளைக் கூட்டியோ அல்லது அட்டவணையைக் கொண்டோ தோராயமாக கன்று ஈனும் நாளை கண்டு அறிதல் வேண்டும்.
** கன்று ஈனும் காலம் நெருங்கும்போது, சினை மாடுகளை மற்ற மாடுகளிலிருந்து பிரித்து தனியாகத் தூய்மையான காற்றோட்டமான, நல்ல வைக்கோல் பரப்பப்பட்ட கொட்டகையில் கட்டவேண்டும்.
** பெரிய பண்ணையில் 12 ச.மீ. இடம் கொண்ட ஈனுதல் அறைகளைத் தனியாக கட்டி இதற்காகப் பயன்படுத்தலாம். தரையில் வைக்கோல் பரப்பி சினை மாட்டிற்கும் கன்றிற்கும் சேதம் ஏற்படாமல் அமைக்க வேண்டும்.
** கருச்சிதைவு ஏற்பட்ட மாடுகளோடு கலவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாடுகள் அதிக தூரம் நடப்பதும் விரட்டப்படுவதும் பயமுறுத்தப் படுவதும், மேடு பள்ளம் நிறைந்த பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்புதலும் தவிர்க்கப்படல் வேண்டும்.
** சினை மாடுகள் மேய்ச்சலுக்கு மேடு பள்ளத்தில் அனுப்பினால் கர்ப்பப்பை சுழற்சி ஏற்படும். சமமான மேய்ச்சல் பகுதியில் மேய்தலே போதுமான உடற் பயிற்சியை அளிக்கும். தனியாக கடுமையான உடற்பயிற்சி தேவையில்லை.
** அதிக வெப்பம், அதிக குளிர் இவைகளிலிருந்து சினை மாடுகள் காக்கப்பட வேண்டும். கடைசி இரண்டு மாதங்களில் மாட்டின் எடை 60-80 கிலோ கூடி விலா எலும்புகள் தெரியா வண்ணம் இருக்க வேண்டும்.
** கடைசி இரண்டு மாதங்களில் கலப்பினத் தீவனக் கலவையோடு தாது உப்புக் கலவையையும் சேர்த்து அளிக்க வேண்டும். மாடுகள் 7 மாதச்சினை காலம் நிறைவுற்ற பின்னும் தொடர்ந்து பால் கரந்து கொண்டிருக்குமானால் அவற்றின் கறவை நேரத்தைத் தள்ளிப்போடுதல், தீவனம், தண்ணீர் இவற்றைக் குறைத்தல் போன்றவைகளைக் கையாண்டு கறவையை வற்றச் செய்வது அவசியம்.
** முந்தைய ஈற்றின்போது பால்ச்சுரம் வந்த மாடுகளுக்கு அவற்றைத் தடுக்கும் நோக்கில் கடைசி காலச்சினையில் கால்சியம் ஊசிகளை போடக்கூடாது.