Here is the technology for Millet Napier Grafting
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் சாகுபடி தொழில்நுட்பம்:
1.. வருடம் முழுவதும் எல்லா வகை மண் வகைகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் புல்லைப் பயிரிடலாம்.
2.. நிலத்தை இரும்புக் கலப்பையைக் கொண்டு 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். நிலத்தைப் பண்படுத்திய பிறகு 60 செ.மீ. இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும்.
3.. மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரங்களை இட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால், 1 ஏக்கருக்கு அடியுரமாக 25 டன் மக்கிய தொழுஉரம், 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதால் மகசூலை நிலை நிறுத்தலாம்.
4.. பாத்திகள் அமைக்கப்பட்ட நிலத்தில் நன்கு நீர்ப் பாய்ச்சிய பின் தண்டுக்கரணையை 60-க்கும் 50 செ.மீ. இடைவெளியில் செங்குத்தாக நடவு செய்ய வேண்டும்.
5.. இவ்வாறு நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 33 ஆயிரத்து 333 கரணைகள் தேவைப்படும். கரணை நட்ட 3ஆவது நாளில் உயிர் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.
6.. பிறகு 10 நாள்களுக்கு 1 முறை நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும். கரணை நட்ட 20ஆவது நாள் ஒரு கைக்களை எடுக்க வேண்டும்.
7.. நடவுக்குப் பின் 75 முதல் 80 நாள்களில் முதல் அறுவடையும், அடுத்தடுத்து 45 நாள்களிலும் தீவனப் பயிர்களை அறுவடை செய்யலாம்.
8.. இவ்வாறு சாகுபடி மேற்கொண்டால், 1 ஹெக்டேரில் 1 ஆண்டுக்கு 7 அறுவடைகளில் 350 முதல் 400 டன் பசுந்தீவன மகசூல் உற்பத்தி செய்யலாம்.
9.. எனவே கறவைமாடு வளர்க்கும் விவசாயிகள் குறைந்தபட்ச நிலத்திலாவது, கோ (சிஎன்) 4 ரக புல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் பால் உற்பத்தியை எளிதாக பெருக்கலாம்.
10.. மேலும் நகர்புற அருகில் உள்ள விவசாயிகள் இப்புல்லை உற்பத்தி செய்து, பசும்புல்லை, ஒரு கிலோ ரூ. 3 வரையில் விற்பனை செய்யலாம். இந்தப் புல்லில் தண்டுக்கரணை உற்பத்தி செய்து விற்பதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம்.
