Asianet News TamilAsianet News Tamil

நம் நாட்டில் உள்ள உயர் ரக எருமை மாட்டினங்கள் இதோ…

Here are the top buffalo breeds in our country ...
Here are the top buffalo breeds in our country ...
Author
First Published Sep 16, 2017, 11:26 AM IST


1.. சுர்தி

இம்மாட்டினங்களின் தாயகம் குஜராத் மாநிலத்தின் கெய்ரா மற்றும் பரோடா மாவட்டங்களாகும். இவற்றின் தோலிலுள்ள முடி பழுப்பு நிறம் முதல் சாம்பல் நிறம் வரை வேறுபடும். தோல் கருப்பு அல்லது பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

இவற்றின் கொம்புகள் அரிவாள் போன்று வளைந்து, நீண்டு தட்டையாகக் காணப்படும். தாடையைச் சுற்றியும், இரண்டு கால்களுக்கும் இடையில் உள்ள நெஞ்சுப்பகுதியிலும் வெள்ளை நிறம் காணப்படுவது இவ்வின எருமைகளின் தனியான குணநலனாகும்.

இவற்றின் பால் உற்பத்தி 900-1300 கிலோவாகும். இவ்வின எருமைகளின் பால் அதிக கொழுப்புச் சத்துக்கு பெயர் பெற்றது (8-12%).

2.. முர்ரா

மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த இன எருமை மாட்டினம் ஹரியானா மாநிலத்தின் ரோட்டக், ஹிசார் மற்றும் ஜின்த் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் நபா, பாட்டியாலா மாவட்டங்களிலிருந்தும், தில்லி மாநிலத்தின் தெற்கு பகுதியிலிருந்தும் தோன்றியவை.

இவை தில்லி, குந்தி, காலி என்றும் அறியப்படுகின்றன. இவற்றின் உடல் அடர்ந்த கருப்பு நிறமாகக் காணப்படும். வாலிலும், முகத்திலும், சில சமயங்களில் கால்களிலும் வெள்ளை நிறம் காணப்படும்.

இவற்றின் கொம்புகள் நன்கு வளைந்திருப்பதே இந்த இன எருமைகளின் முக்கியமான பண்பாகும். இவ்வின எருமைகள் அதிக பால் உற்பத்திக்கும், பாலில் உள்ள அதிக கொழுப்புச்சத்திற்கும் இந்தியாவில் பெயர் பெற்றவை.

முர்ரா இன எருமைகளின் பாலில் 7 சதவிகித கொழுப்புச்சத்து இருக்கும். இவற்றின் சராசரி பால் உற்பத்தி அளவு 1500-2500 கிலோவாகும். மேலும்  இவற்றின் ஒரு நாள் சராசரி பால் உற்பத்தி 6.8 கிலோ.

குறைந்த உற்பத்தி கொண்ட நாட்டு எருமையினங்களை கலப்பினம் செய்வதற்கும் இவ்வின எருமைகள் பயன்படுகின்றன.

3.. ஜப்ராபாடி

இவ்வின எருமைகளின் தாயகம், குஜராத் மாநிலத்தின் கிர் காடுகள், கட்ச், ஜாம் நகர் மாவட்டங்களாகும். இவற்றின் கொம்புகள் திடமாக வளர்ந்து, கழுத்து வரை சாய்ந்து பின் நேராக வளைந்து கூர்மையாக இருக்கும்.

இவற்றின் பால் உற்பத்தி 100-200 கிலோக்களாகும். இவ்வின காளைகள் அதிக உடல் எடையுடன் இருப்பதால் உழவுக்கும், வண்டி இழுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த எருமையினங்கள் பொதுவாக நாடோடி மக்களான மல்தாரிகள் என்பவர்களால் வளர்க்கப்படுகின்றன.

4.. பாதாவாரி

இவ்வின எருமைகளின் தாயகம் உத்திரப்பிரதேசத்தின் ஆக்ரா மற்றும் எட்டாவா மாவட்டங்களும், மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டமுமாகும்.

இவற்றின் உடல் செம்பு நிறத்தில் காணப்படுவது இவற்றின் தனிச்சிறப்பாகும். இவற்றின் கண் இமைகள் பொதுவாக செம்பு நிறத்திலோ அல்லது வெளிறிய பழுப்பு நிறத்திலோ காணப்படும்.

இவற்றின் கழுத்தின் அடிப்பகுதியில் இரண்டு வெள்ளை நிறக்கோடுகள்  காணப்படும். இவற்றின் சராசரி பால் உற்பத்தி 800-1000 கிலோவாகும்.

இந்த எருமையினக் காளைகள் வேலைத்திறனுக்கும் அதிக வெப்பத்தினைத் தாங்குவதற்கும் பெயர் பெற்றவை. இந்த எருமையினங்களின் பாலில் கொழுப்புச்சத்து 6-12.5சதவிகிதம் காணப்படும். இந்த எருமையினங்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த தீவனத்தை அதிக கொழுப்புச்சத்து மிகுந்த பாலாக மாற்றும் திறனுடையவை.

5.. நீலிராவி

இந்த எருமையினம் பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் சட்லெஜ் நதி கரையிலும், பாகிஸ்தானின் சாகிவால் மாவட்டத்திலும்(ராவி ஆற்றின் கரை) தோன்றியது.

இந்த எருமையினங்களின் தனிச்சிறப்பு இவற்றின் கண்களாகும். இவ்வின எருமைகளின் பால் உற்பத்தி ஒரு கறவை காலத்தில்  1500-1850 கிலோவாகும்.

கன்று ஈனும் இடைவெளி 500-550 நாட்களாகவும், முதல் கன்று ஈனும் வயது 50 மாதங்களாகவும் இருக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios